செய்திகள்

சசிகலாவை ஆட்சியமைக்க ஆளுநர் உத்தரவிடக் கோரி உச்ச நீதிமன்றத்தில் மனு

Published On 2017-02-13 07:46 GMT   |   Update On 2017-02-13 07:46 GMT
தமிழகத்தில் பெரும்பான்மை உறுப்பினர்கள் ஆதரவு உள்ள சசிகலாவை ஆட்சியமைக்க ஆளுநருக்கு உத்தரவிடக்கோரி உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
புதுடெல்லி:

அ.தி.மு.க.வில் ஆட்சியையும், கட்சியையும் கைப்பற்றுவதில் ஓ.பன்னீர்செல்வம், சசிகலா இடையே கடும் போட்டி நிலவுகிறது. இரு தரப்பினரும் தங்களை ஆட்சி அமைக்க அழைக்க வேண்டும் என்று தற்காலிக கவர்னர் வித்யாசாகர் ராவிடம் கடிதம் கொடுத்தனர். ஆனால் கவர்னர் யாரையும் அழைக்கவில்லை.

சசிகலா மீதான சொத்துக் குவிப்பு வழக்கில் ஓரிரு நாட்களில் தீர்ப்பு வந்து விடும் என்று எதிர்பார்க்கப்படுவதால் அதுவரை காத்திருக்கலாம் என்று தெரிகிறது. இது தமிழக அரசியலில் கடும் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.

கவர்னர் காலதாமதம் செய்தால் குதிரை பேரத்துக்கு உடந்தையாக இருந்ததாக அவர் மீது வழக்கு தொடர முடியும் என பா.ஜ.க. எம்.பி. சுப்பிரமணியன் சுவாமி கருத்து தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், வழக்கறிஞர் எம்.எல். ஷர்மா என்பவர் உச்ச நீதிமன்றத்தில் இன்று ஒரு மனு தாக்கல் செய்துள்ளார். அதில்,
தமிழகத்தில் சசிகலாவை ஆட்சியமைக்க அழைப்பு விடுக்கும்படி ஆளுநருக்கு உத்தரவிட வேண்டும் என்று தெரிவித்துள்ளார். மேலும், சசிகலாவை ஆட்சியமைப்பதில் ஆளுநர் தாமதம் செய்யக்கூடாது என்றும் அவர் கூறியுள்ளார்.


Similar News