செய்திகள்

உ.பி. முதல்கட்ட தேர்தலில் பா.ஜனதா 50 தொகுதிகளை கைப்பற்றும்: அமித்ஷா

Published On 2017-02-13 05:07 GMT   |   Update On 2017-02-13 05:07 GMT
உத்தரபிரதேசத்தில் முதல்கட்டமாக 73 தொகுதிகளுக்கு நடந்த தேர்தலில் 50 இடங்கள் பா.ஜனதாவுக்கு கிடைக்கும் என்று அக்கட்சியின் தேசிய தலைவர் அமித்ஷா நம்பிக்கை தெரிவித்தார்.
லக்னோ:

உத்தரபிரதேசத்தில் முதல் கட்ட தேர்தல் நடந்த 73 தொகுதிகளில் 50 இடங்களை பா.ஜனதா கைப்பற்றும் என்று அமித்ஷா கூறினார்.

403 தொகுதிகள் கொண்ட உத்தரபிரதேசத்தில் முதல் கட்டமாக 73 தொகுதிகளுக்கு கடந்த 11-ந்தேதி ஓட்டுப்பதிவு நடந்தது. இதில் 50 இடங்கள் பா.ஜனதாவுக்கு கிடைக்கும் என்று அக்கட்சியின் தேசிய தலைவர் அமித்ஷா நம்பிக்கை தெரிவித்தார். இதுபற்றி அவர் அளித்த பேட்டி வருமாறு:-

உத்தரபிரதேசத்தில் சமாஜ்வாடி கட்சிக்கும், பா.ஜனதாவுக்கும் இடையே தான் நேரடிப் போட்டி நிலவுகிறது. முதல் கட்டமாக 73 தொகுதிகளில் நடந்த ஓட்டுப்பதிவில் 50 தொகுதிகளை பா.ஜனதா கைப்பற்றும்.

நாளை மறுநாள் 67 தொகுதிகளுக்கு ஓட்டுப்பதிவு நடக்கிறது. இந்த பகுதிகளும் முதல் கட்ட ஓட்டுப்பதிவு நடந்த இடங்களும் பா.ஜனதாவுக்கு செல்வாக்கு மிக்கவைதான். இந்த இருகட்ட தேர்தலிலும் மொத்தம் 90 தொகுதிகள் பா.ஜனதாவுக்கு கிடைக்கும்.

காங்கிரஸ், சமாஜ்வாடி கட்சி கூட்டணி எந்த விதத்திலும் பொருந்தாத ஒன்று. அது புனிதமான கூட்டணி அல்ல. சமாஜ்வாடி கட்சியில் தலைமை மாறினாலும் அதன் போக்கு மாறவில்லை. காங்கிரசுடன் சேர்ந்தால் சமாஜ்வாடி கட்சிக்கு 100 தொகுதிகள் வரை இழப்பு ஏற்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

உத்தரப்பிரதேச மாநில பா.ஜனதா தலைவர் கேசவ் மவுரியா கூறும்போது, “முதல்கட்ட தேர்தல் நடந்த 73 தொகுதிகளில் பா.ஜனதா 60 இடங்களை கைப்பற்றும். மாநிலம் முழுவதும் மொத்தம் 300 தொகுதிகளில் வெற்றி பெற்று ஆட்சியை பிடிப்போம். முதல் கட்ட தேர்தலில் 64.5 சதவீதம் வாக்குப்பதிவாகி இருப்பதன் மூலம் பிரதமர் மோடியின் ஏழைகளுக்கான நலத்திட்டங்களுக்கு மக்கள் அளித்த ஆதரவு தெரிய வருகிறது” என்றார்.

Similar News