செய்திகள்

கர்நாடக மாநிலத்தில் கம்பளா விளையாட்டை நடத்த அனுமதி கோரி போராட்டம் வலுக்கிறது

Published On 2017-01-30 10:46 IST   |   Update On 2017-01-30 10:46:00 IST
கர்நாடகத்தில் தென் கன்னடம், உடுப்பி மாவட்டங்களில் பாரம்பரியமாக நடைபெற்று வந்த கம்பளா விளையாட்டுக்குத் தடை விதிக்கப்பட்டு உள்ளது. இப்போட்டிக்கு அனுமதி அளிக்கக் கோரி போராட்டம் வலுத்து வருகிறது.
பெங்களூரு:

கர்நாடகத்தில் தென் கன்னடம், உடுப்பி மாவட்டங்களில் பாரம்பரியமாக நடைபெற்று வந்த கம்பளா விளையாட்டுக்குத் (எருமை பந்தயத்துக்கு) தடை விதிக்கப்பட்டு உள்ளது. தற்போது தமிழகத்தில் ஜல்லிக்கட்டை நடத்த அவசரச் சட்டம் இயற்றப்பட்டு உள்ளது.

இதே போல, கர்நாடகத்திலும் கம்பளா விளையாட்டை நடத்த தனிச் சட்டம் இயற்றப்படும் என்று கம்பளா விளையாட்டை பிராணிகளை வதை செய்யாமல் விளையாட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார். தென் கன்னட மக்களின் பாரம்பரிய விளையாட்டான கம்பளாவுக்கு அரசு ஆதரவாக உள்ளது என்றும், விரைவில் கம்பளா விளையாட்டை நடத்த சட்டப்பூர்வமான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.

தென் கன்னட மாவட்டத்தில் கம்பளா விளையாட்டை நடத்த அனுமதி கோரி, போராட்டம் வலுத்து வருகிறது.

கர்நாடக மாநிலம், தென் கன்னட மாவட்டம், மங்களூரு அருகே உள்ள மூடுபித்ரி ஒண்டிகட்டே பகுதியில் பொது மக்கள், விவசாயிகள், மாணவர்கள் உள்ளிட்டோர் பாரம்பரிய விளையாட்டான கம்பளாவை ஆதரித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். முன்னதாக, மூடுபித்ரியில் இருந்து ஒண்டிகட்டே வரை பேரணி நடைபெற்றது. பேரணியில், பாரம்பரிய விளையாட்டான கம்பளாவை மீண்டும் விளையாட அனுமதிக்க வேண்டும். பீட்டா அமைப்பை தடை செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தினர்.

போராட்டத்தில் கலந்து கொண்ட மூடுபித்ரி எம்.எல்.ஏ-வும், முன்னாள் அமைச்சருமான அபய்சந்திர ஜெயின் பேசியதாவது:-

நமது பகுதியின் பாரம்பரிய விளையாட்டான கம்பளாவை மீண்டும் நடத்த அனுமதிக்க வேண்டும். கம்பளா விளையாட்டை அனுமதிக்க மாநில அரசு தயாராக உள்ளது. மத்திய அரசும் இதற்கு ஆதரவு தெரிவிக்கும் என்று நம்புகிறேன். கம்பளா விளையாட்டை நடத்த அனுமதி வழங்கக் கோரி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு உள்ளவர்களுக்கு எனது முழு ஆதரவை தெரிவித்துக் கொள்கிறேன். கம்பளா விளையாட்டை அனுமதிக்கும் வரை எந்த சமரசத்துக்கும் ஒப்புக் கொள்ளக்கூடாது இவ்வாறு அவர் பேசினார்.

பேரணி, போராட்டத்தில் கம்பளா விளையாட்டில் பங்கேற்கும் பூட்டிய எருமை மாடுகளுடன் ஏராளமான விவசாயிகள் கலந்து கொண்டனர்.

கம்பளா விளையாட்டை நடத்த அனுமதிக் கோரி, கர்நாடக அ.தி.மு.க.வினர் பெங்களூருவில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பெங்களூரு ஆனந்தராவ் சதுக்கத்தில் நடைபெற்ற போராட்டத்துக்கு மாநிலச் செயலாளர் புகழேந்தி தலைமை வகித்துப் பேசியதாவது:-

தமிழகத்தில் ஜல்லிக்கட்டு விளையாட்டை நடத்த மாநில அரசு அவசர சட்டம் பிறப்பித்து அனுமதி வழங்கி உள்ளது.

இதே போல, கர்நாடகத்திலும் மாநில பாரம்பரிய விளையாட்டான கம்பளாவை தடையின்றி நடத்த வேண்டும். மாநிலத்தை ஆளும் முதல் மந்திரி சித்தராமையா தலைமையிலான காங்கிரஸ் அரசு, அவசர சட்டம் இயற்றி, மத்திய அரசை கம்பளா நடத்த அனுமதிக்க வலியுறுத்த வேண்டும்.

கர்நாடகத்தில் உள்ள அனைத்து அரசியல் கட்சிகளும், மாணவர் அமைப்புகளும் கம்பளாவை நடத்த ஆதரவு தெரிவித்துள்ளன. மத்திய அரசு பீட்டா அமைப்பை உடனடியாக தடை செய்து, கம்பளா விளையாட்டை நடத்த அனுமதி வழங்க வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

அ.தி.மு.க. மாநில அவைத் தலைவர் கே.முனிசாமி, பொருளாளர் ராஜேந்திரன், துணைச் செயலாளர் ராஜு, மாவட்டச் செயலாளர் கே.குமார், தலைமை பொதுக்குழு உறுப்பினர் சிமொக்கா சம்பத், பாரத ரத்னா எம்.ஜி.ஆர் நற்பணி மன்றத் தலைவர் எம்.ஜி.ஆர். மணி உள்ளிட்ட ஏராளமானோர் போராட்டத்தில் கலந்து கொண்டனர்.

மாநில பாரம்பரிய விளையாட்டான கம்பளாவை ஆதரித்து, தென் கன்னட மாவட்டம், மங்களூரு அருகே ஹம்மன் கட்டாவில் ஆயிரத்துக்கும் அதிகமான மாணவர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

பாரம்பரிய விளையாட்டான கம்பளாவை மீண்டும் விளையாட அனுமதிக்க வேண்டும். பீட்டா அமைப்பை தடை செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தினர்.

Similar News