செய்திகள்

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் கையிருப்பு ரூ.3½ கோடி

Published On 2017-01-30 08:40 IST   |   Update On 2017-01-30 08:40:00 IST
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியிடம் ரூ.3.54 கோடி கையிருப்பு உள்ளதாக தேர்தல் ஆணையத்தின் இணையதளத்தில் வெளியிடப்பட்டு உள்ளன.
புதுடெல்லி:

வருமானவரி விலக்கு பெறுவதற்காக ஒவ்வொரு கட்சியும் தங்கள் ஆண்டு நிதி தணிக்கை அறிக்கையை தேர்தல் ஆணையத்திடம் சமர்ப்பிக்க வேண்டியது அவசியம். அந்தவகையில் 2015-16-ம் ஆண்டுக்காக அளிக்கப்பட்ட கட்சிகளின் தணிக்கை அறிக்கைகள் தேர்தல் ஆணையத்தின் இணையதளத்தில் வெளியிடப்பட்டு உள்ளன.

இந்த தகவல்களை மனித உரிமை ஆர்வலர் வெங்கடேஷ் நாயக் என்பவர் ஆய்வு செய்து தகவல் வெளியிட்டுள்ளார். இதில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி தங்களிடம் ரூ.3.54 கோடி கையிருப்பு உள்ளதாக அறிவித்து உள்ளது. இதைப்போல பகுஜன் சமாஜ் கட்சியிடம் ரூ.26.59 லட்சமும், இந்திய கம்யூனிஸ்டு கட்சியிடம் ரூ.88 ஆயிரத்து 468-ம் கையிருப்பு இருப்பதாக கூறப்பட்டு உள்ளது.

மிகப்பெரிய கட்சிகளான காங்கிரஸ் மற்றும் பா.ஜனதா கட்சிகளின் நிதி நிலவரம் குறித்து தேர்தல் ஆணைய இணையதளத்தில் எதுவும் வெளியிடவில்லை. இந்த கட்சிகள் தங்கள் நிதி நிலவரம் குறித்து எந்த தகவலும் அளிக்கவில்லை என கூறப்படுகிறது.

இதைப்போல ஆம் ஆத்மி, அசாம் கணபரிஷத், ஐக்கிய ஜனதாதளம், தேசிய மாநாடு, மக்கள் ஜனநாயக கட்சி, ராஷ்ட்ரீய ஜனதாதளம் உள்ளிட்ட மாநில கட்சிகளும் 2015-16-ம் ஆண்டுக்கான தணிக்கை அறிக்கைகளை இன்னும் சமர்ப்பிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. 

Similar News