செய்திகள்

உத்தரகாண்ட் தேர்தல்: வேலை இல்லாத இளைஞர்களுக்கு மாதம் ரூ.2500 உதவித் தொகை- காங்கிரஸ் வாக்குறுதி

Published On 2017-01-29 05:59 GMT   |   Update On 2017-01-29 05:59 GMT
உத்தரகாண்ட் தேர்தல் வேலை இல்லாத இளைஞர்களுக்கு மாதம் தோறும் ரூ.2500 உதவித் தொகை வழங்கப்படும் என்று காங்கிரஸ் முதல்-மந்திரி வாக்குறுதி அளித்துள்ளார்.

டேராடூன்:

70 தொகுதிகளை கொண்ட உத்தரகாண்ட் சட்ட சபைக்கு பிப்ரவரி 15-ந் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடக்கிறது.

இங்கு ஆளும் காங்கிரஸ் கட்சிக்கும், பா.ஜனதாவுக்கும் இடையே ஆட்சியை கைப்பற்ற கடும் போட்டி நிலவுகிறது.

முதல்-மந்திரி ஹரிஷ் ராவத் ஆட்சியை தக்க வைத்துக் கொள்ள வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறார். இதனால் இளைஞர்களின் பக்கம் கவனத்தை அதிகமாக செலுத்தி உள்ளார்.

மாநிலத்தில் மொத்தம் 76 லட்சம் வாக்காளர்கள் உள்ளனர். இதில் 40 வயதுக்கு கீழ் உள்ளவர்கள் 42 லட்சம் பேர் இருக்கிறார்கள். அவர்களின் வாக்குகளை தன் பக்கம் இழுக்க அவர் அதிரடியான திட்டங்களை அறிவித்துள்ளார்.

அவர் 9 வாக்குறுதிகளை மையமாக வைத்து ஒரு புத்தகத்தை வெளியிட்டுள்ளார். அதில் இளைஞர்களுக்கு இலவசமாக செல்போன் வழங்கப்படும் என்று உறுதி அளித்து உள்ளார்.

மேலும் ஒரு ஆண்டுக்கு இலவச இன்டர்நெட் சேவை வழங்கப்படும், வேலை இல்லாத இளைஞர்களுக்கு மாதம் தோறும் ரூ.2500 உதவித் தொகை வழங்கப்படும். இளைஞர்கள் வேலை பெற பயிற்சி அளிக்கப்படும் என்று வாக்குறுதி அளித்துள்ளார்.

2018 மார்ச்சுக்குள் அனைத்து கிராமங்களிலும் மின்சாரம் விநியோகிக்கப்படும், 2019 மார்ச்சுக்குள் சாலை மற்றும் குடிநீர் பிரச்சினை தீர்க்கப்படும் என்றும் வாக்குறுதி அளித்து உள்ளார்.

இந்த வாக்குறுதிகள் அனைத்தும் தேர்தல் அறிக்கையில் இடம் பெறும் என்றும் ஹரீஷ் ராவத் தெரிவித்துள்ளார்.

Similar News