செய்திகள்

திருநங்கையருக்கு இலவச பிறப்புறுப்பு மாற்று அறுவை சிகிச்சை: மேற்கு வங்காளம் அரசு ஏற்பாடு

Published On 2017-01-16 09:25 GMT   |   Update On 2017-01-16 09:25 GMT
மூன்றாம் பாலினத்தவர்களான திருநங்கையருக்கு இலவசமாக பிறப்புறுப்பு மாற்று அறுவை சிகிச்சை செய்ய மேற்கு வங்காளம் அரசு தீர்மானித்துள்ளது.
கொல்கத்தா:

மேற்கு வங்காளம் மாநில தலைநகரான கொல்கத்தாவில் உள்ள ஆர்.ஜி. கர் அரசு மருத்துவமனையில் ஆண் மற்றும் பெண்களுக்கான பாலின மாற்று அறுவை சிகிச்சை செய்யும் வசதி தற்போது நடைமுறையில் உள்ளது.

இந்த வசதியை மாநிலத்தில் உள்ள இதர முக்கிய மருத்துவமனைகளுக்கும் விரிவாக்க்கம் செய்ய அரசு முயற்சித்து வருகிறது. இதன் விளைவாக எஸ்.எஸ்.கே.எம். சிறப்பு பன்னோக்கு மருத்துவமனையிலும் இந்த சிகிச்சை முறை விரைவில் அறிமுகம் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.

இந்நிலையில், மூன்றாம் பாலினத்தவர்களான திருநங்கையரின் பிறப்புறுப்பு மாற்று அறுவை சிகிச்சைக்கான செலவு முழுவதையும் ஏற்றுக்கொள்ள மேற்கு வங்காளம் அரசு தீர்மானித்துள்ளது.

இந்த புதிய திட்டத்தின்கீழ், தனது உடல்ரீதியான பாலின அடையாளத்தில் திருப்தி அடையாத 17 முதல் 25 வயதுக்குட்பட்ட நபர்கள் முதலில் தாங்கள் வசித்துவரும் மாவட்டத்தில் உள்ள மாநில சுகாதாரம் மற்றும் மக்கள் நலவாழ்வுத்துறை அதிகாரியிடம் மனு செய்ய வேண்டும்.

பின்னர், இத்துறை அதிகாரிகளால் நியமிக்கப்பட்டுள்ள உளவியல் நிபுணர்கள அடங்கிய சீராய்வு கமிட்டியின் கலந்தாய்வு கூட்டத்தில் அவர்கள் பங்கேற்று சில பரிசோதனைக்குள்ளாக வேண்டும். அங்கு அவர்களுக்கு உளவியல் ரீதியான ஆலோசனைகள் அளிக்கப்படும்.

அப்போது, அந்நபர் முழுமையான பெண்ணாக மாற விரும்பினால், முக சீரமைப்பு, மார்பக சீரமைப்பு, குரல் மாற்றம் உள்ளிட்ட முதல்கட்ட சிகிச்சைகளுக்கு பின்னர், ஹார்மோன் மாற்றுமுறை சிகிச்சை அளிக்கப்படும்.

மேற்கண்ட சிகிச்சைகள் அனைத்தும் வெற்றிகரமாக முடிந்த பின்னர் பிறப்புறுப்பு மாற்று அறுவை சிகிச்சை நடத்தப்படும். இந்த சிகிச்சை அனைத்தும் அரசின் செலவில் இலவசமாகவே அளிக்கப்படும் என மேற்கு வங்காளம் மாநில அரசின் சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தற்போது, மாநிலத்தின் ஒன்றிரண்டு மருத்துவமனைகளில் மட்டுமே உள்ள மேற்படி சிகிச்சை வசதிகள் படிப்படியாக மாவட்டங்களில் உள்ள அரசு தலைமை மருத்துவமனைகளுக்கும் விரிவாக்கம் செய்யப்படும் எனவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Similar News