செய்திகள்

கேரளாவில் இளம்பெண்ணை மானபங்கம் செய்த 2 வாலிபர்கள் கைது

Published On 2017-01-09 10:53 IST   |   Update On 2017-01-09 10:53:00 IST
பெங்களூரு சம்பவத்தை போல கேரளாவில் மோட்டார் சைக்கிளில் வந்த 2 வாலிபர்கள் இளம்பெண்ணை மானபங்கம் செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திருவனந்தபுரம்:

பெங்களூருவில் புத்தாண்டு கொண்டாட்டத்தில் பங்கேற்று விட்டு வீடு திரும்பிய இளம்பெண்ணை வாலிபர்கள் சிலர் வழிமறித்து மானபங்கம் செய்தனர்.

இந்த சம்பவம் நடந்த பகுதியில் உள்ள வீட்டில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு காமிராவில் இக்காட்சிகள் பதிவானது. அதனை வீட்டு உரிமையாளர் போலீசாருக்கு தெரிவித்ததால் இச்சம்பவம் வெளிச்சத்திற்கு வந்தது.

நாடுமுழுவதும் அதிர்ச்சி அலையை ஏற்படுத்திய இச்சம்பவத்தில் ஈடுபட்ட 4 பேர் சமீபத்தில் கைது செய்யப்பட்டனர்.

பெங்களூருவில் நடந்தது போன்ற இன்னொரு சம்பவம் கேரள மாநிலம் காயங்குளம் பகுதியில் 2 நாட்களுக்கு முன்பு நடந்தது. பெங்களூரு சம்பவம் அதிகாலையில் நடந்தது. ஆனால் காயங்குளத்தில் பட்டப்பகலில் பஸ் நிலையம் அருகே பலர் கூடி நின்ற நேரத்தில் நடத்தப்பட்டது.

இதில் ஒரு பெண் பஸ் நிலையம் அருகே நடந்து வந்த போது, மோட்டார் சைக்கிளில் வந்த 2 வாலிபர்கள் திடீரென அந்த பெண்ணை வழிமறித்தனர். அவர்களில் ஒருவர் அந்த பெண்ணை கட்டிஅணைத்து மானபங்கம் செய்தார்.

பெண் கூச்சலிட்டதும், அக்கம்பக்கத்தில் நின்றவர்கள் ஓடி வந்தனர். அவர்களை கண்டதும் வாலிபர்கள் மோட்டார் சைக்கிளில் ஏறி தப்பிச் சென்றனர்.

இச்சம்பவம் பற்றி பஸ் நிலையத்தில் நின்றவர்கள் காயங்குளம் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். மேலும் இளம்பெண்ணை மானபங்கம் செய்த வாலிபர்கள் வந்த மோட்டார் சைக்கிளின் நம்பரையும் தெரிவித்தனர்.

அதன்மூலம் போலீசார் அதிரடி விசாரணையில் இறங்கினர். இதில் இளம்பெண்ணை மானபங்கம் செய்தது ஓச்சிரா, மென்மனாவைச் சேர்ந்த நிதின், விஷாக் என தெரிய வந்தது. இருவரையும் போலீசார் பிடித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

இந்த சம்பவம் கேரளாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Similar News