செய்திகள்

பிரதமரின் நிவாரண நிதி பெறும் அளவுக்கு வார்தா பாதிப்பு இல்லை: மத்திய நிபுணர்குழு

Published On 2016-12-30 07:06 GMT   |   Update On 2016-12-30 07:06 GMT
பிரதமரின் நிவாரண நிதி பெறும் அளவுக்கு ‘வார்தா’ புயல் பாதிப்பு இல்லை’ என மத்திய நிபுணர் குழு தெரிவித்துள்ளது.
புதுடெல்லி:

‘வர்தா’ புயல் சமீபத்தில் சென்னை, திருவள்ளூர் மற்றும் காஞ்சீபுரம் ஆகிய 3 மாவட்டங்களில் தாக்கியது. அதில் பலத்த சேதம் ஏற்பட்டது. இது குறித்து முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் பிரதமர் நரேந்திர மோடிக்கு ஒரு கடிதம் அனுப்பினார். அதில் ‘வார்தா’ புயல் தாக்கியதில் சென்னை, காஞ்சீபுரம், மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மின் கம்பங்கள் சாய்ந்தன. 800-க்கும் மேற்பட்ட டிரான்ஸ்பார்மர்கள் சேதம் அடைந்தன. 16 பேர் உயிரிழந்துள்ளனர்.

எனவே புயல் பாதித்த பகுதிகளில் மறு சீரமைப்பு, மற்றும் நிவாரண பணிக்காக உடனடியாக ரூ.1000 கோடி வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்து இருந்தார். அதன் பின்னர் டெல்லி சென்ற அவர் பிரதமர் மோடியை நேரில் சந்தித்து உடனடியாக ரூ.2 ஆயிரம் கோடி வழங்க வேண்டும் என்றும், ரூ.22 ஆயிரத்து 573 கோடி புயல் நிவாரண நிதி ஆக வழங்க வேண்டும் என்றும் மனு அளித்தார்.

அதைத் தொடர்ந்து புயல் சேதத்தை பார்வையிட மத்திய அரசு 9 அதிகாரிகள் அடங்கிய நிபுணர் குழுவை தமிழ்நாட்டுக்கு அனுப்பியது. அவர்கள் கடந்த 2 நாட்களாக புயல் பாதித்த சென்னை, காஞ்சீபுரம், மற்றும் திருவள்ளூர் மாவட்ட பகுதிகளுக்கு நேரில் சென்று ஆய்வு செய்தனர்.

இதுகுறித்து மீட்பு குழு அதிகாரிகள் கருத்து தெரிவித்துள்ளனர். பிரதமர் நிவாரண நிதி பெறும் அளவுக்கு வார்தா புயல் பாதிப்பு எதுவும் இல்லை.

இது ஒரு இயற்கை பேரழிவு. ஆனால் அதன் பாதிப்பு பெரிய அளவில் இல்லை என கூறியதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

Similar News