செய்திகள்

பழைய ரூ.500, ரூ.1000 நோட்டுகள் ரூ.8.45 லட்சம் கோடி திரும்ப பெறப்பட்டுள்ளது

Published On 2016-11-29 07:46 GMT   |   Update On 2016-11-29 07:46 GMT
இந்தியாவில் பழைய ரூ.500, ரூ1000 நோட்டுகள் மொத்தம் 14 லட்சம் கோடி ரூபாய் அளவுக்கு புழக்கத்தில் இருந்தன. இதில் 8.45 லட்சம் கோடி ரூபாய் திரும்ப பெறப்பட்டுள்ளது.
மும்பை:

பழைய ரூ.500, ரூ.1000 நோட்டுகளை வங்கிகளில் டெபாசிட் செய்வதற்கு அடுத்த மாதம் (டிசம்பர்) 30-ந் தேதி வரை கால அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது.

நாடு முழுவதும் பொது மக்கள் கடந்த 10-ந் தேதி முதல் ரூ.500, ரூ.1000 நோட்டுகளை வங்கிகளில் கொடுத்து மாற்றியும், வங்கிகளில் டெபாசிட் செய்தும் வருகிறார்கள். நேற்று முன்தினம் வரை 18 நாட்களில் எவ்வளவு பழைய பணம் வங்கிகள் மூலம் வந்துள்ளது என்று கணக்கிடப்பட்டுள்ளது.

அதில் நவம்பர் 10-ந் தேதி முதல் 27-ந் தேதி வரை 8.45 லட்சம் கோடி ரூபாய் அளவுக்கு ரூ.500, ரூ.1000 நோட்டுகள் அரசால் திரும்பப் பெறப்பட்டு இருக்கிறது. இதில் ரூ.33,948 கோடி பொதுமக்கள் வங்கிகளில் தங்களிடம் இருந்த ரூ.500, ரூ.1000 நோட்டுகளை கொடுத்து மாற்றியதாகும்.

ரூ.8,11,033 கோடி வங்கிகளில் டெபாசிட் செய்யப்பட்டதாகும். இந்தியாவில் பழைய ரூ.500, ரூ1000 நோட்டுகள் மொத்தம் 14 லட்சம் கோடி ரூபாய் அளவுக்கு புழக்கத்தில் இருந்தன.

இதில் 8.45 லட்சம் கோடி ரூபாய் திரும்ப பெறப்பட்டுள்ளது. அதாவது செல்லாத ரூபாய் நோட்டுகளில் 57 சதவீதம் அரசிடம் சென்று விட்டது.

இன்னும் 30 முதல் 33 சதவீதம் பழைய செல்லாத ரூபாய் நோட்டுகள் மக்களிடம் புழக்கத்தில் உள்ளது. அவற்றை விரைந்து டெபாசிட் செய்ய வைக்கும் முயற்சிகளில் அரசு ஈடுபட்டுள்ளது.

ரூ.500, ரூ.1000 நோட்டுகள் செல்லாது என்ற அறிவிக்கப்பட்ட பிறகு நாடு முழுவதும் மக்கள் வங்கிகள், ஏ.டி.எம்.கள் மூலம் கடந்த 19 நாட்களில் ரூ.2 லட்சத்து 16 ஆயிரத்து 617 கோடி ரூபாயை எடுத்துள்ளனர். மத்திய அரசு இந்த நாட்களில் புதிதாக ரூ.2½ லட்சம் கோடி ரூபாயை புழக்கத்தில் விட்டது.

இந்த நிலையில் பழைய ரூபாய் நோட்டுகளை புழக்கத்தில் இருந்து முற்றிலும் அகற்ற மத்திய அரசு ஏ.டி.எம்.கள், வங்கிகளில் பணம் எடுக்கும் உச்ச வரம்பை விலக்கியுள்ளது.

Similar News