செய்திகள்

ரூ.50, ரூ.100 நோட்டுகள் தொடர்ந்து புழக்கத்தில் இருக்கும்: மத்திய அரசு அறிவிப்பு

Published On 2016-11-28 03:50 GMT   |   Update On 2016-11-28 03:50 GMT
ரூ.50, ரூ.100 நோட்டுகள் தொடர்ந்து புழக்கத்தில் இருக்கும் எனவும், இது தொடர்பான வதந்திகளை யாரும் நம்ப வேண்டாம் எனவும் மத்திய அரசு அறிவித்து உள்ளது.
புதுடெல்லி:

கருப்பு பணத்தை ஒழிக்கும் நோக்கில் ரூ.500, ரூ.1,000 நோட்டுகள் செல்லாது என கடந்த 8-ந்தேதி பிரதமர் அறிவித்தார். மேலும் அந்த நோட்டுகளை மாற்றிக்கொள்ள பல்வேறு வசதிகளையும் மத்திய அரசு அறிவித்தது.

இதன் தொடர்ச்சியாக ரூ.100 மற்றும் ரூ.50 நோட்டுகளும் ஒழிக்கப்பட போவதாகவும், இது தொடர்பாக பிரதமர் மீண்டும் நாட்டு மக்களுக்கு உரையாற்ற இருப்பதாகவும் பல்வேறு புரளிகள் கிளம்பி உள்ளன.

இந்த கட்டுக்கதைகளை மறுக்கும் வகையில், ‘நோட்டு வாபஸ் கட்டுக்கதை அழிப்பு’ என்ற தலைப்பில் மத்திய அரசு அறிக்கை வெளியிட்டு உள்ளது.

அதில், ‘ரூ.50, ரூ.100 உள்பட எந்த நோட்டுகளையும் தடை செய்யும் திட்டம் எதுவும் இல்லை. இப்படிப்பட்ட ஆதாரமற்ற வதந்திகளை யாரும் நம்ப வேண்டாம். இந்த நோட்டுகள் அனைத்தும் தொடர்ந்து புழக்கத்தில் இருக்கும்’ என்று கூறப்பட்டு உள்ளது.

இதைப்போல புதிதாக வெளியிடப்பட்டு உள்ள ரூபாய் நோட்டுகளில் ‘சிப்’ பொருத்தப்பட்டு உள்ளது என்று வெளியான தகவல்களையும், தற்போதைய ரூபாய் நோட்டு வாபஸ் திட்டம் பா.ஜனதா தலைவர்கள் மற்றும் கார்ப்பரேட் கம்பெனி உரிமையாளர்களுக்கு முன்கூட்டியே தெரியும் என்ற தகவல்களையும் மத்திய அரசு மறுத்து உள்ளது.

Similar News