செய்திகள்

திருப்பதி: லாரிகள் நேருக்குநேர் மோதி தீப்பிடித்தது - டிரைவர்கள் பலி

Published On 2016-11-25 12:31 GMT   |   Update On 2016-11-25 12:32 GMT
திருப்பதி அருகே லாரிகள் நேருக்குநேர் பயங்கரமாக மோதி கொண்ட விபத்தில் 2 டிரைவர்கள் தீயில் கருகி பலியாகினர்.
திருப்பதி:

திருப்பதி அடுத்த சந்திரகிரி-தொண்டவாடா இடையில் நேற்று மாலை பெங்களூர் மங்களகிரியில் இருந்து குளிர்பானம் ஏற்றி வந்த லாரியும், விஜயவாடா- மங்களூரில் இருந்து இரும்பு கம்பிகள் ஏற்றி வந்த லாரியும் நேருக்கு நேர் பயங்கரமாக மோதிக் கொண்டன.

இந்த விபத்தில் 2 லாரிகளும் நொறுங்கின. இதில் தீ பற்றியதில் லாரிகள் மளமளவென எரிந்தன. விபத்தில் லாரிகளின் முன்பகுதிகள் முற்றிலும் நொறுங்கியதால் இடிபாடுகளில் சிக்கிய 2 டிரைவர்களும் பலத்த காயமடைந்தனர்.

அவர்களால், லாரியை விட்டு வெளியேற முடியவில்லை. இடிபாடுகளில் அந்த அளவுக்கு சிக்கிக் கொண்டு உயிருக்கு ஆபத்தான நிலையில் அலறினர். 2 லாரிகள் முழுவதும் தீ பரவி கொளுந்துவிட்டு எரிந்தன.

இந்த கோர விபத்தில் இரும்புக் கம்பிகளை ஏற்றி வந்த லாரியின் டிரைவர் லாரியில் அமர்ந்த நிலையிலேயே தீயில் கருகி பலியானார். குளிர்பான லாரியின் டிரைவரும் உடல் கருகி இறந்தார்.

குளிர்பான லாரியின் கிளீனர் லாரியில் இருந்து கீழே குதித்ததால் பலத்த காயங்களுடன் உயிர் தப்பினர். விபத்து குறித்து அறிந்த சந்திரகிரி போலீஸ் இன்ஸ்பெக்டர் சிவபிரசாத், சப்-இன்ஸ்பெக்டர் வினோத்குமார் மற்றும் போலீசார் விரைந்து வந்தனர்.

படுகாயமடைந்த லாரி கிளீனரை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். இந்த விபத்து குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

நடுரோட்டில் நடந்த இந்த கோர சம்பவம் வாகன ஓட்டிகளை அதிர்ச்சியில் உறைய வைத்தது.

Similar News