செய்திகள்

பிரமாண்டமான ஆடம்பர பங்களாவில் குடியேறிய சந்திரசேகர ராவ்

Published On 2016-11-24 05:35 GMT   |   Update On 2016-11-24 05:35 GMT
1 லட்சம் சதுர அடியில் கட்டப்பட்ட பிரமாண்டமான ஆடம்பர பங்களாவில் தெலுங்கானா மாநில முதல்-மந்திரி சந்திரசேகர ராவ் குடியேறினார்.
நகரி:

தெலுங்கானா மாநில முதல்-மந்திரி சந்திரசேகர ராவ் ஐதராபாத்தில் உள்ள பேகம்பேட்டையில் குடும்பத்துடன் வசித்து வருகிறார்.

இங்கு ஒரு லட்சம் சதுர அடி பரப்பளவில் பிரமாண்ட பங்களா கட்ட சந்திரசேகரராவ் முடிவு செய்தார். இதற்காக பூமி பூஜை மற்றும் அடிக்கல் நாட்டு விழா கடந்த மார்ச் மாதம் நடந்தது.

இதையடுத்து ஆடம்பர பங்களா கட்டுமான பணி விறுவிறுப்பாக நடந்து வந்தது. ரூ.38 கோடி செலவில் அரண்மனை போன்று வடிவில் அமைக்கப்பட்டது.

சந்திரசேகரராவுக்கு வாஸ்து மீது அதீத நம்பிக்கை கொண்டவர். இதனால் புதிய பங்களா வாஸ்து நிபுணர்களின் ஆலோசனைப்படி பணிகள் மேற்கொள்ளப்பட்டது.

3 பிளாக்குகளுடன் கூடிய புதிய பங்களாவில் 1000 பேர் அமரக்கூடிய அரங்கம் கட்டப்பட்டுள்ளது. மேலும் முதல்வர் அலுவலகமும் அனைத்து வசதிகளுடன் அமைக்கப்பட்டு உள்ளது.

சந்திரசேகரராவ் மகனும், அமைச்சருமான கே.டி.ராமாராவுக்கு தனி வீடு கட்டப்பட்டுள்ளது. பங்களாவை சுற்றி மிக உயரமான சுற்றுச்சுவர் எழுப்பி உள்ளது. இதனால் வெளியில் இருந்து யாரும் பங்களாவை பார்க்க முடியாது.

இந்த வீட்டில் குளியலறைகளில் பல லட்சம் மதிப்புள்ள குண்டு துளைக்காத கண்ணாடிகளை பொருத்தி உள்ளனர். மேலும் ஜன்னல், கதவுகள், குண்டு துளைக்காத வகையில் அமைக்கப்பட்டு இருக்கிறது.

சந்திரசேகரராவுக்கு நக்சலைட்டுகள் மிரட்டல் இருப்பதால் இந்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இங்கு 50-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பில் ஈடுபடுவார்கள் என்றும் கூறி உள்ளனர்.

ஆடம்பர பங்களா கட்டுமான பணிகள் அனைத்தும் நிறைவடைந்ததால் இன்று காலை 5.22 மணிக்கு சந்திர சேகரராவ் குடும்பத்துடன் குடியேறினார். அப்போது கணபதி ஹோமம், யாக பூஜை போன்றவை நடந்தது.

Similar News