செய்திகள்

உயர் ரத்த அழுத்த பாதிப்பு: 20 கோடி பேருடன் இரண்டாவது இடத்தில் இந்தியா

Published On 2016-11-18 13:40 IST   |   Update On 2016-11-18 13:40:00 IST
உயர் ரத்த அழுத்தத்தால் இந்தியாவில் 20 கோடி பேர் பாதிக்கப்பட்டிருப்பதாக ஆய்வில் தெரிய வந்துள்ளது.
உயர் ரத்த அழுத்தம் குறித்து லண்டன் இம்பீரியல் கல்லூரியை சேர்ந்த விஞ்ஞானிகள் உலகளவில் மிகப்பெரிய ஆய்வொன்றை நடத்தினர். கடந்த 1975-ம் ஆண்டு முதல் 2015-ம் ஆண்டு வரை உலகளவில் உயர் ரத்த அழுத்த பாதிப்பில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள் குறித்து விஞ்ஞானிகள் தொடர்ந்து ஆய்வு நடத்தினர்.

இதற்காக சுமார் 2 கோடிக்கும் மேற்பட்டோரின் உயர் ரத்த அழுத்த பரிசோதனைகள் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டுள்ளன. ஆய்வின் முடிவில் பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் கிடைத்துள்ளன.

* ஏறக்குறைய உலகில் சுமார் 113 கோடி பேர் உயர் ரத்த அழுத்தத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

* மக்கள் தொகையில் முதலிடம் வகிக்கும் சீனா 22.6 கோடி மக்களுடன் உயர் ரத்த அழுத்தத்தில் முதலிடம் வகிக்கிறது. மக்கள் தொகையில் இரண்டாமிடம் வகிக்கும் இந்தியா 20 கோடி மக்களுடன் இரண்டாவது இடத்தில் உள்ளது.

* கடந்த 40 ஆண்டுகளில் உயர் ரத்த அழுத்தம் உலகம் முழுவதும் இரண்டு மடங்கு அதிகரித்துள்ளது. பெண்களை விட ஆண்களையே உயர் ரத்த அழுத்தம் அதிகளவில் தாக்குகிறது.

* தென் கொரியா, அமெரிக்கா, கனடா, பிரிட்டன் ஆகிய நாடுகளில் குறைந்தளவு மக்களே உயர் ரத்த அழுத்தத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

* ஆசிய நாடுகளைச் சேர்ந்த பாதிக்கும் மேற்பட்டோர் உயர் ரத்த அழுத்தத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதுகுறித்து ஆராய்ச்சி நடத்திய விஞ்ஞானிகளில் ஒருவரான எசாட்டி ஊட்டச்சத்து குறைந்த உணவுகளை சாப்பிடுவதே இதற்கு காரணமென்றும், ஏழை நாடுகளில் இந்த நோயின் தாக்கம் அதிகளவில் இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

Similar News