செய்திகள்

ஊழல், கருப்பு பணத்தை ஒழிக்க நாட்டின் நலனுக்காக எடுத்த முடிவு: பியூஸ் கோயல் விளக்கம்

Published On 2016-11-17 03:55 GMT   |   Update On 2016-11-17 03:55 GMT
பணம் செல்லாது என்ற அறிவிப்பு ஊழல், கருப்பு பணத்தை ஒழிக்க நாட்டின் நலனுக்காக எடுத்த முடிவு என்று டெல்லி மேல்-சபையில் மத்திய மந்திரி பியூஸ் கோயல் தெரிவித்தார்.
புதுடெல்லி:

நாடு முழுவதும் 8-ந் தேதி நள்ளிரவு முதல் ரூ.500, ரூ.1,000 நோட்டுகள் செல்லாது என மத்திய அரசு வெளியிட்ட அறிவிப்புக்கு காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன.

இது தொடர்பாக டெல்லி மேல்-சபையில் நேற்று காங்கிரஸ் மூத்த தலைவர் ஆனந்த் சர்மா பேசுகையில், மத்திய அரசின் இந்த திடீர் அறிவிப்பால் அப்பாவி மக்கள் தான் அவதிப்படுகின்றனர். இது நாட்டு மக்களுக்கு எதிரான நடவடிக்கை என கண்டனம் தெரிவித்தார்.

இதற்கு பதில் அளித்து மத்திய மின்சார துறை மந்திரி பியூஸ் கோயல் பேசியதாவது:-

பிரதமர் நரேந்திர மோடியின் இந்த முடிவு முழுக்க, முழுக்க நாட்டின் நலனை கருத்தில் கொண்டு தான் எடுக்கப்பட்டது. ஊழல், கருப்பு பணத்தை ஒழிக்கவும், தீவிரவாதிகள் கள்ள நோட்டுகளை வினியோகிப்பதை தடுக்கவும் மத்திய அரசு அதிரடி நடவடிக்கை மேற்கொண்டது. அரசின் இந்த முடிவு சிலருக்கு முன்பே தெரிந்துள்ளது என்று எதிர்க்கட்சிகள் கூறும் குற்றச்சாட்டில் துளியும் உண்மை இல்லை.

இதற்கு முன் இருந்த அரசு லஞ்சத்திலும், ஊழலிலும் மூழ்கி இருந்தது. ஊழல், கருப்பு பணத்தை ஒழிக்க எந்த அரசுக்காவது தைரியம் இருந்ததா? அந்த தைரியம் பா.ஜ.க. அரசுக்கும், நரேந்திர மோடிக்கும் மட்டுமே உள்ளது. மக்களின் எதிர்பார்ப்பை மோடி அரசு பூர்த்தி செய்துள்ளது. இதில் அரசியல் எதுவும் இல்லை. இந்த நடவடிக்கையால் பணவீக்கம், வங்கி வட்டி விகிதம், பல்வேறு வரி இனங்கள் குறையும்.

செல்லாத பணத்தை மாற்றுவதற்காக மக்கள் சில கஷ்டங்களை அனுபவிப்பது வேதனை அளிக்கிறது. என்றாலும் நாட்டின் எதிர்காலத்தை எண்ணி தற்காலிக சிரமங்களை மக்கள் புரிந்து கொள்வார்கள் என நம்புகிறேன். 5 சதவீதம் பேர் வரி கட்டவில்லை என்றால் மற்ற 95 சதவீதம் பேர் மீது தான் அதன் சுமை விழும். அனைவரும் முறையாக வரியை செலுத்தினால் மக்கள்நல திட்டங்களை சிறப்பாக செயல்படுத்த முடியும்.

உத்தரபிரதேச சட்டமன்ற தேர்தலில் பலன்பெறவே இந்த முடிவை மத்திய அரசு எடுத்துள்ளதாக சிலர் குற்றம்சாட்டுகின்றனர். இதன் மூலம் இந்த அறிவிப்பை மக்கள் வரவேற்கின்றனர் என்று தானே அர்த்தம். சுவிஸ் வங்கியில் கணக்கு வைத்திருப்பவர்கள் பெயர் பட்டியலை வெளியிடுமாறு ஒரு தரப்பினர் கேட்கின்றனர். இது பற்றிய தகவல்களை பெறுவதில் நடைமுறை சிக்கல் உள்ளன.

இவ்வாறு அவர் கூறினார்.

Similar News