செய்திகள்

பறவை காய்ச்சல் காரணமாக சக்தி ஸ்தாலில் இந்திரா காந்தி நினைவு தினம் அனுசரிக்கப்படாது

Published On 2016-10-30 18:50 IST   |   Update On 2016-10-30 18:50:00 IST
பறவை காய்ச்சல் காரணமாக நாளை முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் நினைவு தினம் ‘சக்தி ஸ்தாலில்’ அனுசரிக்கப்படாது என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.
புதுடெல்லி:

டெல்லியில் கடந்த சில நாட்களாக பறவை காய்ச்சல் காரணமாக ஏராளமான பறவைகள் உயிரிழந்தன. கால்நடை வளர்ப்பு துறையினர் அந்த பறவைகளை மீட்டு போபாலில் உள்ள விலங்குகள் நோய் பரிசோதனை மையத்திற்கு அனுப்பி வைத்தனர்.

இதற்கிடையே டெல்லி ராஜ்கோட்டில் அமைந்துள்ள முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி நினைவிடமான ‘சக்தி ஸ்தாலில்’ கடந்த வாரம் பறவை காய்ச்சல் காரணமாக ஏராளமான வாத்துகள் உயிரிழந்தன. இதனால் டெல்லி வளர்ச்சி துறை மந்திரி தலைமையில் அதிகாரிகள் அங்கு நேரில் பார்வையிட்டு பரிசோதனை முடிவுகள் வரும் வரை இந்திரா காந்தி நினைவிடத்தை மூட உத்தரவிட்டனர். இதனால் கடந்த வாரம் ‘சக்தி ஸ்தால்’ மூடப்பட்டது.

இந்திரா காந்தியின் நினைவு தினம் நாளை (அக்டோபர் 31-ம் தேதி) அனுசரிக்கப்பட இருக்கிறது. இந்திரா காந்தி நினைவிடமான ‘சக்தி ஸ்தால்’ மூடப்பட்டதால் இந்த வருடம் இந்திரா காந்தி நினைவு தினம் அங்கு அனுசரிக்கப்படாது என அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி அறிக்கை வெளியிட்டுள்ளது.

Similar News