செய்திகள்

ரூ.10 ஆயிரம் கோடியை பதுக்கவில்லை: பிரதமர் மோடிக்கு ஜெகன்மோகன் கடிதம்

Published On 2016-10-15 05:37 GMT   |   Update On 2016-10-15 05:37 GMT
ரூ.10 ஆயிரம் கோடியை பதுக்கவில்லை என பிரதமர் மோடிக்கு ஜெகன்மோகன் கடிதம் ஒன்றை எழுதி இருக்கிறார். அதில், கருப்பு பணம் பதுக்கியவர் பெயரை சந்திரபாபு நாயுடு வெளியிட வேண்டும் எனவும் கூறியுள்ளார்.

நகரி:

ஆந்திர முதல்-மந்திரி சந்திரபாபு நாயுடு நிருபர்களுக்கு பேட்டி அளித்தபோது பரபரப்பு தகவல் ஒன்றை கூறினார்.

ஆந்திராவில் ரூ.13 ஆயிரம் கோடி கருப்பு பணத்தை மத்திய அரசிடம் வரி செலுத்தி வெள்ளை பணமாக மாற்றப்பட்டு உள்ளது.

இதில் ஒரு நபர் மட்டும் ரூ 10 ஆயிரம் கோடி கருப்பு பணத்தை மாற்றி இருக்கிறார். ஒரு வியாபாரியால் இவ்வளவு பணம் சம்பாதிக்க முடியுமா?

இந்த பணத்தை அரசியல் வியாபாரி ஒருவர்தான் பதுக்கி உள்ளார் என்று கூறினார். பணம் பதுக்கியவரின் பெயரை சொல்லாமல் மறைமுகமாக குற்றம் சாட்டினார்.

ஆனால் மந்திரி உமா மகேஸ்வர்ராவ், கருப்பு பணம் பதுக்கியவர் ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸ் கட்சி தலைவர் ஜெகன்மோகன் ரெட்டி தான் என்று பகிரங்கமாக கூறினார்.

இதற்கு ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சி கடும் கண்டனம் தெரிவித்தது. ஆதாரம் இல்லாமல் ஜெகன்மோகன் ரெட்டி மீது புகார் கூறுவதாக தெரிவித்தது.

இந்த நிலையில் பிரதமர் மோடிக்கு ஜெகன்மோகன் ரெட்டி கடிதம் ஒன்றை எழுதி இருக்கிறார். அதில், கருப்பு பணம் பதுக்கியவர் பற்றி தகவல்களை சொல்லி இருக்கிறார். மத்திய அரசிடம் வரி செலுத்தி கருப்பு பணத்தை வெள்ளையாக மாற்றும் நபர்களின் பெயர்கள் ரகசியமாக வைக்கப்படும் என்று கூறி உள்ள நிலையில் சந்திரபாபு நாயுடுவுக்கு எப்படி அந்த தகவல் தெரியும்.

ரகசியமாக உள்ள தகவலை சந்திரபாபு நாயுடு தெரிந்து வைத்து உள்ளதால் அதை பொதுமக்களும் அறிந்து கொள்ள உரிமை இருக்கிறது.

எனவே சந்திரபாபு நாயுடு கூறிய கருப்பு பணம் பதுக்கியவரின் பெயரை வெளியிட வேண்டும். நான் கருப்பு பணம் பதுக்கியதால் பொய் குற்றசாட்டுகளை கூறி வருகின்றனர்.

சந்திரபாபு நாயுடு ஊழலில் திளைத்து வருகிறார். அதுபற்றி புத்தகமாக எழுதி அதனுடன் ஆதாரங்களை இணைத்து உங்களுக்கு அளித்தோம். ஆனால் இதுவரை அவர் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறி உள்ளார்.

Similar News