செய்திகள்

சபரிமலை கோவில் புதிய கொடிமரத்துக்கு மூலிகைமுழுக்கு: நடிகர் சுரேஷ்கோபி எம்.பி. - பக்தர்கள் பங்கேற்பு

Published On 2016-10-14 09:19 GMT   |   Update On 2016-10-14 09:19 GMT
சபரிமலை கோவிலில் புதிய கொடிமரத்துக்கு மூலிகைமுழுக்கு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் நடிகர் சுரேஷ்கோபி எம்.பி., பக்தர்கள் பங்கேற்றனர்.
திருவனந்தபுரம்:

சபரிமலை சுவாமி அய்யப்பன் கோவிலில் உள்ள 100 ஆண்டு பழமையான கொடிமரம் பழுதடைந்து இருப்பது தேவபிரசன்னம் மூலம் தெரியவந்தது.

இதைதொடர்ந்து புதிதாக தங்க கொடிமரம் அமைக்க முடிவு செய்யப்பட்டது. அதற்கான பணிகளும் தொடங்கி நடந்து வருகிறது. முதல்கட்டமாக சபரிமலை வனப்பகுதியில் இருந்து பழமையான தேக்கு மரம் தேர்வு செய்து வெட்டி பம்பை கணபதி கோவிலுக்கு கொண்டு செல்லப்பட்டது.

அங்கு அந்த கொடிமரத்திற்கு விசே‌ஷ பூஜைகள் செய்யப்பட்டு பணிகள் தொடங்கப்பட்டன. இந்த நிலையில் நேற்று இந்த கொடிமரத்தை மூலிகை எண்ணெய் நிரப்பிய தொட்டியில் மூழ்கவைக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

இதற்காக பம்பை கணபதி கோவில் முன்பு பெரிய தொட்டி அமைக்கப்பட்டு அதில் 32 வகை மூலிகை எண்ணெய் ஊற்றப்பட்டது. சபரிமலை கோவில் தந்திரி கண்டரரு ராஜீவரு மூலிகை எண்ணெய் ஊற்றி பணியை தொடங்கி வைத்தார். தொடர்ந்து திரளான பக்தர்கள் மூலிகை எண்ணெயை ஊற்றினார்கள்.

பிரபல மலையாள நடிகரும் டெல்லி மேல் சபை எம்.பி.யுமான சுரேஷ்கோபியும் நேற்று சபரிமலைக்கு சென்றார். மலைபாதை வழியாக நடந்தே சென்ற அவர் புதிய கொடிமர மூலிகை எண்ணெய் முழுக்கு நிகழ்ச்சியில் பங்கேற்றார். 10 டின் மூலிகை எண்ணெய் அவர் காணிக்கையாக வழங்கினார். 6 மாத காலத்திற்கு மூலிகை எண்ணெயில் இந்த கொடிமரம் மூழ்கி இருக்கும்.

நேற்று சபரிமலையில் பலத்த மழை பெய்தது. மழையையும் பொருட்படுத்தாமல் திரளான பக்தர்கள் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.

கொடிமர பணிகள் நடைபெற்றுக்கொண்டிருந்த போது ஒரு பெரிய நல்ல பாம்பு எங்கிருந்தோ அங்கு வந்தது. இதனால் பக்தர்கள் இடையே பரபரப்பு ஏற்பட்டது. அந்த பாம்பு யாருக்கும் இடையூறு செய்யாமல் கொடிமரம் வைக்கப்பட்டிருந்த மூலிகை எண்ணெய் தொட்டி அருகே சென்று படம் எடுத்து ஆடியது. பிறகு அருகில் உள்ள அணையா விளக்கு அருகே சென்று சுருண்டு படுத்துக்கொண்டது.

நீண்டநேரம் ஆகியும் அந்த பாம்பு அங்கிருந்து செல்லவில்லை. பக்தர்களும் இது தெய்வசெயல் என்று கூறியபடி அந்த பாம்புக்கு இடையூறு செய்யாமல் வணங்கிச் சென்றனர்.

Similar News