செய்திகள்

கர்நாடக அணையில் இருந்து தமிழகத்திற்கு தண்ணீர் திறப்பு நிறுத்தம்: நாளை அவசரமாக கூடுகிறது கர்நாடக அமைச்சரவை

Published On 2016-09-19 20:07 IST   |   Update On 2016-09-19 20:07:00 IST
தமிழகத்திற்கு மேலும் 10 நாட்கள் காவிரி நீர் திறந்துவிடும்படி மேற்பார்வைக்குழு கூறியுள்ள நிலையில் கர்நாடகத்தில் உள்ள ஒரு அணையில் இருந்து தண்ணீர் திறப்பு நிறுத்தப்பட்டுள்ளது.
பெங்களூர்:

காவிரி நதிநீர் பங்கீடு தொடர்பான வழக்கில் கர்நாடக அரசின் கோரிக்கையை ஏற்க மறுத்த உச்ச நீதிமன்றம், தமிழகத்திற்கு தண்ணீர் திறந்துவிடும்படி உத்தரவிட்டது. வேறுவழியின்றி தண்ணீரை திறந்துவிட்டது கர்நாடக அரசு. ஆனால், தண்ணீர் திறக்கப்பட்டதை எதிர்த்தும், உச்ச நீதிமன்ற உத்தரவைக் கண்டித்தும் கர்நாடக மாநிலத்தில் வன்முறைப் போராட்டங்கள் வெடித்தன. தமிழர்கள் தாக்கப்பட்டதுடன், தமிழர்களின் உடைமைகளும் சூறையாடப்பட்டன. தீ வைப்பு சம்பவங்கள் தீவிரமடைந்ததையடுத்து, பல்வேறு பகுதிகளில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

இந்த நிலையில் இன்று காவிரி மேற்பார்வை குழு கூட்டம் நடைபெற்றது. அப்போது செப்டம்பர் 21 முதல் 10 நாட்களுக்கு தினமும் 3000 கனஅடி நீரை தமிழகத்துக்கு திறந்துவிட வேண்டும் என கர்நாடக அரசுக்கு மேற்பார்வைக் குழு உத்தரவிட்டது. இது கர்நாடகத்திற்கு மேலும் பின்னடைவை ஏற்படுத்தி உள்ளது. தமிழகத்திற்கு தண்ணீர் தர முடியாது என்று மாநில நீர்வளத்துறை அமைச்சர் எம்.பி. பாட்டீல் திட்டவட்டமாக கூறினார்.

மேலும், உச்ச நீதிமன்றத்தில் இவ்வழக்கு நாளை நடைபெற உள்ளதால், நீதிமன்றம் அளிக்கும் தீர்ப்பைப் பொறுத்தே முடிவு செய்வதாகவும் அவர் கூறினார்.

இந்த பரபரப்பான சூழ்நிலையில், கர்நாடக அணைகளில் இருந்து தமிழகத்திற்கு தண்ணீர் திறக்கப்படுவது திடீரென நிறுத்தப்பட்டதாக தகவல் வெளியானது. ஆனால், நீர் இருப்பு குறைந்ததால் கிருஷ்ணராஜசாகர் அணையில் இருந்து தண்ணீர் திறப்பு நிறுத்தப்பட்டதாகவும், கபினி அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையே காவிரி மேற்பார்வைக்குழுவின் உத்தரவு குறித்து ஆலோசித்து அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து ஆலோசிப்பதற்காக பெங்களூரில் நாளை மாநில அமைச்சரவை அவசரமாக கூடுகிறது. அப்போது உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்வது குறித்து முடிவு செய்யப்படலாம் என தெரிகிறது.

அதேசமயம், மேற்பார்வைக் குழுவின் உத்தரவை எதிர்த்து கன்னட அமைப்புகள் மீண்டும் போராட்டத்தில் குதிக்கும் சூழ்நிலை உள்ளதால், பெங்களூரில் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

Similar News