செய்திகள்

ஆந்திராவில் டெங்கு காய்ச்சலுக்கு 2 சிறுவர்கள் பலி

Published On 2016-09-19 04:57 GMT   |   Update On 2016-09-19 04:57 GMT
ஆந்திராவில் டெங்கு காய்ச்சலுக்கு 2 சிறுவர்கள் பலியாகினார்கள்.

நகரி:

ஆந்திர மாநிலத்தில் டெங்கு காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது. டெங்கு காய்ச்சலால் சிறுவர்களும், மலைவாழ் மக்களும் அதிகமாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

மேலும் மலேரியா மற்றும் வாந்தி பேதியும் பொது மக்களிடையே பரவி வருகிறது. இதனால் ஏராளமான பொதுமக்கள் ஆஸ்பத்திரிக்கு வந்து சிகிச்சை பெறுகிறார்கள்.

ஆஸ்பத்திரிகளில் நோயாளிகள் அதிக அளவில் காணப்படுவதால் 3 சிறுவர்களுக்கு ஒரு படுக்கை ஒதுக்கப்படுகிறது. அப்படியும் இடமில்லாமல் தரையில் பெற்றோரின் மடியிலேயே படுக்க வைக்கப்பட்டு சிறுவர்-சிறுமிகளுக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது.

அரசு ஆஸ்பத்திரியில் கூட்டம் அதிகமாக இருப்பதால் பலர் தனியார் ஆஸ்பத்திக்கு சென்று ஆயிரக் கணக்கில் பணம் செவழித்து சிகிச்சை பெறுகிறார்கள்.

அனந்தபுரம் மாவட்டத்தில் அதிக அளவில் டெங்கு காய்ச்சலால் பொதுமக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். அனந்தபுரம் ஆஸ்பத்திரியில் நேற்று 150 பேருக்கு ரத்த பரிசோதனை செய்யப்பட்டது. இதில் 16 பேருக்கு டெங்கு பாதிப்பு இருப்பது தெரியவந்தது.

அனந்தபுரம் மாவட்டத்தில் நேற்று டெங்கு காய்ச்சலுக்கு இத்ரீஸ் (12), லத்தீப்ஜுவைத் (9) ஆகிய 2 சிறுவர்கள் பலியாகினார்கள். அனந்தபுரம் மாவட்டத்தில் கடந்த 15 நாளில் 28 பேர் மர்ம காய்ச்சலுக்கு பலியாகியுள்ளனர்.

விசாகப்பட்டினம் மனயம் காட்டுப் பகுதியில் மழை வாழ் மக்கள் 535 பேர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

ஆந்திரா முழுவதும் கடந்த 8 மாதங்களில் 15 ஆயிரத்து 300 பேர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுள்ளனர். 51 ஆயிரத்து 256 பேர் மலேரியாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். வாந்தி-பேதியால் 4 லட்சத்து 30 ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

Similar News