செய்திகள்

உயரதிகாரிகள் டார்ச்சர்: போலீஸ் எஸ்.ஐ. துப்பாக்கியால் சுட்டு தற்கொலை

Published On 2016-08-17 07:05 GMT   |   Update On 2016-08-17 07:05 GMT
தெலுங்கானா மாநிலத்தில் உயரதிகாரிகளின் டார்ச்சரால் மனம்வெறுத்துப் போன போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் தன்னைத்தானே துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஐதராபாத்:

தெலுங்கானா மாநிலத்தில் உயரதிகாரிகளின் டார்ச்சரால் மனம்வெறுத்துப் போன போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் தன்னைத்தானே துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தெலுங்கானா மாநிலம், மேடக் மாவட்டத்தில் உள்ள குக்நூர் போலீஸ் நிலையத்தில் சப்-இன்ஸ்பெக்டராக பணியாற்றி வந்தவர், ராமகிருஷ்ணா ரெட்டி. இங்குள்ள போலீஸ் குடியிருப்பில் வசித்துவரும் இவர், தனது குடும்பத்தாரை சொந்த ஊரான நளகொண்டா மாவட்டத்தில் உள்ள பாக்கெமந்திரம் குடம் கிராமத்துக்கு அனுப்பி வைத்துவிட்டு, நேற்று வீட்டில் தனியாக இருந்துள்ளார்.

இன்று அதிகாலை சுமார் 2 மணியளவில் அவரது வீட்டில் இருந்து துப்பாக்கி வெடித்த சப்தம் கேட்டு அருகாமையில் உள்ள வீடுகளில் வசிக்கும் போலீசார் ராமகிருஷ்ணா ரெட்டியின் வீட்டுக்கு விரைந்து சென்றனர். அப்போது, சுமார் 45 வயது மதிக்கத்தக்க ராமகிருஷ்ணா ரெட்டி, தன்னைத்தானே துப்பாக்கியால் நெற்றியில் சுட்டு தற்கொலை செய்துகொண்டு, ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்தார்.

தகவல் அறிந்து விரைந்துவந்த அவரது குடும்பத்தார், உயரதிகாரிகளின் டார்ச்சரால் மனம்வெறுத்துப் போய் இந்த விபரீத முடிவை அவர் தேர்ந்தெடுத்ததாக குற்றம்சாட்டுகின்றனர். உயரதிகாரிகளின் டார்ச்சர் தொடர்பாக தனது தற்கொலை கடிதத்தில் அவர் குறிப்பிட்டுள்ளதாகவும் உறவினர்கள் தெரிவித்தனர்.

இச்சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார், ராமகிருஷ்ணா ரெட்டியின் பிரேதத்தை கைப்பற்றி, பரிசோதனைக்காக கஜ்வேலில் உள்ள அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். இன்று காலை அங்குவந்த மேடக் மாவட்ட போலீஸ் சூப்பிரண்ட் சந்திரசேகர ரெட்டி, பலியான ராமகிருஷ்ணா ரெட்டியின் பிரேதத்துக்கு இறுதி மரியாதை செலுத்தினார்.

Similar News