செய்திகள் (Tamil News)

மறைந்த பிரமுக் சுவாமியின் உடலுக்கு அஞ்சலி செலுத்தினார் அரவிந்த் கெஜ்ரிவால்

Published On 2016-08-16 10:14 GMT   |   Update On 2016-08-16 10:14 GMT
குஜராத் மாநிலத்தில், மறைந்த பிரமுக் சுவாமியின் உடலுக்கு டெல்லி முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் அஞ்சலி செலுத்தினார்.
அகமதாபாத்:

சுவாமி நாராயண் சன்ஸ்தா அமைப்பின் தலைவரும், ஆன்மிக குருவுமான பிரமுக் சுவாமி மஹராஜ் (95) வயது மூப்பின் காரணமாக குஜராத் மாநிலம், போடாத் மாவட்டத்தில் உள்ள சாரங்பூரில் கடந்த சனிக்கிழமை காலமானார்.

வயது மூப்பின் காரணமாக கடந்த சில மாதங்களாக உடல்நலக் குறைவால் பிரமுக் சுவாமி பாதிக்கப்பட்டிருந்தார். போடாத் மாவட்டம், சாரங்பூரில் உள்ள கோயிலின் ஒரு பகுதியில் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில், சனிக்கிழமை மாலை 6 மணியளவில் அவர் காலமானார்.

பிரமுக் சுவாமியின் உடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக சாரங்பூரில் உள்ள கோவிலில் ஆகஸ்ட் 17-ம்தேதி(நாளை) வரை வைக்கப்பட்டுள்ளது. நாளை நடைபெற உள்ள இறுதிச்சடங்கிற்குப் பிறகு அவரது உடல் கோவில் வளாகத்தில் தகனம் செய்யப்படுகிறது.

இந்நிலையில், ஆம் ஆத்மி கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளரும், டெல்லி முதல்-மந்திரியுமான அரவிந்த் கெஜ்ரிவால் இன்று பிரமுக் சுவாமியின் உடலுக்கு அஞ்சலி செலுத்தினார்.

அஞ்சலி செலுத்திய பின் செய்தியாளர்களிடம் கெஜ்ரிவால் பேசியதாவது:-

பிரமுக் சுவாமி தன்னுடைய வாழ்க்கை முழுவதையும் மனித நேயத்தையும், இந்து கலாச்சாரத்தையும் முன்னெடுத்து செல்வதற்காக அர்ப்பணித்தார்.

அவருடைய மறைவு குஜராத் மாநிலத்திற்கு மட்டுமல்ல இந்தியாவிற்கும், உலகத்திற்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அவரது உடல் இந்த உலகை விட்டு சென்றிருக்கலாம். ஆனால் அவரது ஆன்மாவும், அவர் சொன்ன கருத்துக்களும் மனித குலத்தை சுற்றியே இருக்கும்.

இவ்வாறு கூறினார்.

முன்னதாக பிரதமர் நரேந்திர மோடி மறைந்த பிரமுக் சுவாமியின் உடலுக்கு நேற்று மதியம் அஞ்சலி செலுத்தினார்.

Similar News