செய்திகள்

கேரள சட்டமன்றத் தேர்தல்: அச்சுதானந்தன-பினராயி விஜயன் இன்று வேட்பு மனு தாக்கல் செய்தனர்

Published On 2016-04-25 16:03 IST   |   Update On 2016-04-25 16:03:00 IST
கேரள சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடும் எதிர்க்கட்சி தலைவரும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவருமான அச்சுதானந்தன் மற்றும் பினராயி விஜயன் ஆகியோர் இன்று வேட்பு மனு தாக்கல் செய்தனர்.
திருவனந்தபுரம்:

கேரளாவில் மே 16-ம் தேதி சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான வேட்பு மனு தாக்கல் தொடங்கியுள்ளது. இடதுசாரி ஜனநாயக முன்னணியில் இடம்பெற்றுள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் பாலக்காடு மாவட்டம் மலம்புழா தொகுதியில் எதிர்க்கட்சி தலைவர் அச்சுதானந்தன் போட்டியிடுகிறார். அவர் இன்று கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களுடன் வந்து மனு தாக்கல் செய்தார்.

மனு தாக்கல் செய்த பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அச்சுசுதானந்தன், வரும் சட்டமன்றத் தேர்தலில் இடதுசாரி ஜனநாயக முன்னணி பெரும்பான்மை இடங்களில் வெற்றிபெறும் என்று நம்பிக்கை தெரிவித்தார்.

கட்சியின் பொலிட்பீரோ உறுப்பினர் பினராயி விஜயன், கண்ணூர் கலெக்டர் அலுவலகத்தில் வேட்பு மனுவை தாக்கல் செய்தார். இவர் தர்மதாம் தொகுதியில் போட்டியிடுகிறார்.

இதேபோல் மந்திரிகள் ஷிபு பேபி ஜான் (ஆர்.எஸ்.பி), பி.கே.ஜெயலட்சுமி (காங்கிரஸ்), எம்.கே.முனீர் (இந்திய யூனியன் முஸ்லிம் லீக்), வி.சிவன்குட்டி எம்எல்ஏ (மார்க்சிஸ்ட்) மற்றும் முன்னாள் எம்.பி. சீமா (மார்க்சிஸ்ட்) ஆகியோரும் இரண்டாம் நாளான இன்று மனு தாக்கல் செய்தனர்.

Similar News