செய்திகள்

உத்தரகாண்ட் அரசியல் நிலவரத்தை மையப்படுத்தி எதிர்க்கட்சிகள் அமளி: பாராளுமன்ற மேல்சபை முடங்கியது

Published On 2016-04-25 15:35 IST   |   Update On 2016-04-25 15:35:00 IST
பாராளுமன்றத்தில் மத்திய பட்ஜெட்டின் இரண்டாவது அமர்வின் முதல்நாளான இன்று உத்தரகாண்ட் மாநிலத்தில் ஜனாதிபதி ஆட்சியை அமல்படுத்தியத்து தொடர்பான அரசியல் நிலவரத்தை மையப்படுத்தி எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டதால் இன்றைய பாராளுமன்ற மேல்சபை கூட்டம் நாள்முழுவதும் முடங்கியது.
புதுடெல்லி:

முன்னதாக, இன்று காலை அவை தொடங்கியதும் பாராளுமன்ற முன்னாள் உறுப்பினர்களான ருமான்ட்லா ராமசந்திரய்யா, ஜுமுல் லாஸ்ல் பேன்டியா, சில்வேரா மற்றும் ஊர்மிளா சிமன்பாய் பட்டேல் ஆகியோரின் மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டது.

பின்னர், உத்தரகாண்ட் மாநிலத்தில் ஜனாதிபதி ஆட்சியை அமல்படுத்தியத்து தொடர்பான அரசியல் நிலவரத்தை மையப்படுத்தி இதுதொடர்பாக விவாதிக்க வேண்டும் என வலியுறுத்தி காங்கிரஸ் எம்.பி. ஆனந்த் சர்மா மற்றும் கம்யூனிஸ்ட் உள்ளிட்ட எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டனர்.

அவர்களை அமைதிப்படுத்த சபாநாயகர் ஹமித் அன்சாரி முயன்றார். ஆனால், காங்கிரஸ் உள்பட எதிர்க்கட்சியை சேர்ந்த எம்.பி.க்கள் இதே கோரிக்கையை வலியுறுத்தி தொடர்ந்து கோஷமிட்டனர். எனவே, 12 மணிவரை அவை ஒத்திவைக்கப்பட்டது.

12 மணிக்கு அவை கூடியபோதும் இதேநிலை நீடித்ததால் பிற்பகல் 2 மணி வரையிலும், அதைதொடர்ந்து 3 மணி வரையிலும் அவை ஒத்திவைக்கப்பட்டது. 3 மணிக்கு பின்னரும் எதிர்க்கட்சியினர் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டதால் நாள் முழுவதும் அவையை ஒத்திவைப்பதாக சபாநாயகர் அறிவித்தார். இதனால், இன்றைய பாராளுமன்ற மேல்சபை கூட்டம் நாள்முழுவதும் முடங்கியது.

Similar News