இந்தியா

கண்ணூர் அருகே மலைப்பாம்பை கொன்று சமைத்து சாப்பிட்ட 2 பேர் கைது

Published On 2025-09-12 09:57 IST   |   Update On 2025-09-12 09:57:00 IST
  • சம்பவத்தன்று அவர்கள் இருவரும் தங்களது வீட்டின் அருகில் உள்ள ரப்பர் தோட்டத்தில் சென்று கொண்டிருந்தனர்.
  • இருவரும் தாங்கள் தயாரித்த மலைப்பாம்பு இறைச்சியை வீட்டுக்குள் அமர்ந்து சாப்பிட்டு இருக்கின்றனர்.

திருவனந்தபுரம்:

கேரள மாநிலம் கண்ணூர் மாவட்டம் பனப்புழா பகுதியில் இருவர் மலைப்பாம்மை கொன்று இறைச்சி சமைப்பதாக வனத்துறை அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் வந்தது. அதன்பேரில் தளிப் பரம்பா வனச்சரக அதிகாரி சனூப் கிருஷ்ணன் தலைமையிலான வனத்துறையினர் பனப்புழா பகுதிக்கு சென்றனர்.

அங்கு சந்தேகத்தின் பேரில் ஒரு வீட்டில் சோதனை செய்தனர். அப்போது அந்த வீட்டில் இருவர் மலைப்பாம்பை கொன்று இறைச்சியாக சமைத்து சாப்பிட்டுக் கொண்டிருந்தனர். இதையடுத்து அவர்கள் இருவரையும் வனத்துறையினர் பிடித்தனர்.

அவர்கள் மாதமங்கலம் பனப்புழாவை பூர்வீகமாக கொண்ட பிரமோத் (வயது40), வந்தனஞ்சேரி பினீஷ்(37) ஆவர். அவர்களிடம் விசாரணை நடத்தியபோது மலைப்பாம்பை வேட்டையாடி சாப்பிட்டதை ஒப்புக் கொண்டனர்.

சம்பவத்தன்று மாலை அவர்கள் இருவரும் தங்களது வீட்டின் அருகில் உள்ள ரப்பர் தோட்டத்தில் சென்று கொண்டிருந்தனர். அப்போது அங்கு ஒரு மலைப்பாம்பு ஊர்ந்து சென்றது. அதனை பிரமோத் மற்றும் பினீஷ் ஆகிய இருவரும் சேர்ந்து அடித்து கொன்றிருக்கின்றனர்.

பின்பு அதனை தங்களின் வீட்டுக்கு எடுத்து வந்து துண்டுதுண்டாக வெட்டி சுத்தப்படுத்தி இறைச்சியாக சமைத்துள்ளனர். பின்பு இருவரும் தாங்கள் தயாரித்த மலைப்பாம்பு இறைச்சியை வீட்டுக்குள் அமர்ந்து சாப்பிட்டு இருக்கின்றனர்.

இதுபற்றி அந்த பகுதியை சேர்ந்த ஒருவர் வனத்துறைக்கு தகவல் கொடுத்தார். அதன்பேரில் வனத்துறையினர் சம்பவ இடத்துக்கு வந்து இருவரையும் பிடித்துவிட்டனர். பிரமோத் மற்றும் பினீஷ் மீது வனவிலங்குகள் பாதுகாப்பு சட்டத்தின் கீழ் வழக்குப்பதிந்து இருவரை யும் வனத்துறையினர் கைது செய்தனர்.

பிரமோத் மற்றும் பினீஷ் தங்கியிருந்த வீட்டில் இருந்து மலைப்பாம்பு உடலின் சில பாகங்கள் மற்றும் அவர்கள் சமைத்து வைத்திருந்த மலைப்பாம்பு இறைச்சி உள்ளிட்டவைகள் வனத்துறையினரால் பறிமுதல் செய்யப்பட்டடது.

Tags:    

Similar News