இந்தியா

155 துப்பாக்கிகள்.. 1,652 தோட்டாக்கள் - மணிப்பூரில் சோதனை வேட்டையில் குவியல் குவியலாக சிக்கிய ஆயுதங்கள்

Published On 2025-07-29 00:23 IST   |   Update On 2025-07-29 00:23:00 IST
  • எட்டு 9 மிமீ பிஸ்டல்கள், பதினான்கு 12 போர் துப்பாக்கிகள், 21 சிங்கிள் போர் துப்பாக்கிகள் மற்றும் 14 நாட்டுத் துப்பாக்கிகள் ஆகியவை அடங்கும்.
  • துப்பாக்கிகள் மட்டுமல்லாமல், ஆபத்தான வெடிபொருட்கள் மற்றும் தகவல் தொடர்பு சாதனங்களும் கைப்பற்றப்பட்டுள்ளன.

மணிப்பூரில் பாதுகாப்புப் படையினர் மேற்கொண்ட அதிரடி சோதனைகளில், பெருமளவிலான ஆயுதங்கள், வெடிமருந்துகள் மற்றும் பிற போர் தளவாடங்கள் மீட்கப்பட்டுள்ளன.

மலை மாவட்டங்களான சுராசந்த்பூர், காங்போக்பி, பெர்சாவ்ல், தெங்காப்பால் மற்றும் சந்தேல் ஆகிய பகுதிகளில் இந்த சோதனை நடனதப்பட்டது.

காவல்துறை வட்டாரங்கள் உறுதிப்படுத்திய தகவலின்படி, மொத்தம் 155 துப்பாக்கிகள் மற்றும் 1,652 தோட்டாக்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இதில் அதிநவீன மற்றும் உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட ஆயுதங்கள் அடங்கும்.

கைப்பற்றப்பட்ட ஆயுதங்களில் எட்டு ஏகே சீரிஸ் ரைபிள்கள், இரண்டு இன்சாஸ் ரைபிள்கள், நான்கு கார்பைன்கள், ஒரு எஸ்.எல்.ஆர், எட்டு 9 மிமீ பிஸ்டல்கள், பதினான்கு 12 போர் துப்பாக்கிகள், 21 சிங்கிள் போர் துப்பாக்கிகள் மற்றும் 14 நாட்டுத் துப்பாக்கிகள் ஆகியவை அடங்கும்.

துப்பாக்கிகள் மட்டுமல்லாமல், ஆபத்தான வெடிபொருட்கள் மற்றும் தகவல் தொடர்பு சாதனங்களும் கைப்பற்றப்பட்டுள்ளன.

இதில் 31 பம்பி (உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட மோட்டார்கள்), 39 மேம்படுத்தப்பட்ட வெடிகுண்டுகள் (IEDs) மற்றும் 13 கையெறி குண்டுகள் அடங்கும். மேலும், பாதுகாப்புப் படையினர் 15 தகவல் தொடர்பு சாதனங்களையும், நான்கு தொலைநோக்கிகளையும் மீட்டுள்ளனர்.

எந்தவொரு சந்தேகத்திற்கிடமான நடவடிக்கைகளையும் அருகிலுள்ள காவல் நிலையம் அல்லது மத்திய கட்டுப்பாட்டு அறைக்கு உடனடியாகத் தெரிவிக்குமாறு மக்களுக்கு வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது. 

Tags:    

Similar News