இந்தியா

திருவனந்தபுரம் அருகே மார்க்கெட்டில் விற்பனைக்கு கொண்டு வரப்பட்ட 10 டன் அழுகிய மீன்கள்

Published On 2022-06-07 04:11 GMT   |   Update On 2022-06-07 04:11 GMT
  • மீன் சந்தைக்கு கெட்டுபோன மீன்கள் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டுள்ளதாக உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
  • 3 லாரிகளில் வந்த 9600 கிலோ மீன்கள் கெட்டுபோய் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

திருவனந்தபுரம்:

கேரள மாநிலத்தில் கொரோனா பரவல் குறைந்து வந்தாலும் பறவை காய்ச்சல் மற்றும் புதிய வகை நோரோ வைரஸ் காய்ச்சல் ஆகியவை பரவி வருகிறது.

நோரோ வைரஸ், அசுத்தமான தண்ணீர் மூலம் பரவுவதாக சுகாதாரத்துறை அதிகாரிகள் கூறியுள்ளனர். இதனால் பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்கவும், கெட்டு போன உணவு வகைகளை பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும் எனவும் அறிவுறுத்தி உள்ளனர்.

இதற்காக மாநிலம் முழுவதும் சுகாதார துறையினர் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

இந்நிலையில் திருவனந்தபுரத்தை அடுத்த அஞ்சுதெங்கு பகுதியில் உள்ள மீன் சந்தைக்கு கெட்டுபோன மீன்கள் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டுள்ளதாக உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் மீன் மார்க்கெட்டுக்கு அதிரடியாக சென்றனர். அங்கு விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த மீன்களை அவர்கள் சோதனை செய்தனர்.

அதிகாரிகளின் சோதனையில் மார்க்கெட்டில் இருந்த சுமார் 10 டன் மீன்கள் அழுகிய நிலையில் இருந்தது கண்டு பிடிக்கப்பட்டது. அவை அனைத்தையும் பறிமுதல் செய்த அதிகாரிகள் அதனை உடனடியாக அழித்தனர்.

இதுபற்றி உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் கூறும்போது, அஞ்சு தெங்கு பகுதியில் உள்ள மார்க்கெட்டுக்கு வெளியூரில் இருந்து மீன்கள் விற்பனைக்கு கொண்டு வரப்படுகின்றன. இதில் 3 லாரிகளில் வந்த 9600 கிலோ மீன்கள் கெட்டுபோய் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அதனை பெரிய குழி தோண்டி கொட்டி மீன்கள் அனைத்தும் அழிக்கப்பட்டது, என்றார்.

Tags:    

Similar News