செய்திகள்
வைரல் புகைப்படம்

இந்திய விமான படையின் சாதனை என கூறி வைரலாகும் புகைப்படம்

Published On 2021-08-19 10:58 IST   |   Update On 2021-08-19 11:01:00 IST
ஆப்கானிஸ்தானில் இருந்த இந்தியர்கள் இந்திய விமான படை விமானத்தில் பத்திரமாக மீட்கப்படும் போது எடுக்கப்பட்டதாக கூறி புகைப்படம் வைரலாகி வருகிறது.


விமானம் ஒன்றினுள் பலர் அமர்ந்து இருக்கும் புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. வைரல் புகைப்படம் தலிபான்கள் காபூலை கைப்பற்றியதை தொடர்ந்து ஆப்கானிஸ்தானில் இருந்து 800 பேரை இந்திய விமான படை விமானம் இந்தியா அழைத்து வரும் போது எடுக்கப்பட்டதாக வலைதளங்களில் குறிப்பிடப்பட்டு இருக்கிறது.  

ஆகஸ்ட் 16 ஆம் தேதி ஐ.ஏ.எப். சி-17 விமானத்தில் ஆப்கானிஸ்தானில் இருந்த இந்தியர்கள் காபூலில் இருந்து இந்தியா கொண்டுவரப்பட்டனர். பதற்ற சூழல் காரணமாக காபூலில் உள்ள இந்திய தூதர் மற்றும் இந்திய அதிகாரிகள் உடனடியாக இந்தியா திரும்புவர் என இந்திய வெளியுறவுத் துறை செய்தி தொடர்பாளர் ட்விட்டரில் தெரிவித்து இருந்தார்.

இதையொட்டி ஆப்கானிஸ்தான் நாட்டுக்கான இந்திய தூதர் ருத்ரேந்திரா தன்டன் மற்றும் அலுவலக அதிகாரிகள், குடிமக்கள் என 120 பேர் முதற்கட்டமாக காபூலில் இருந்து இந்தியா வந்தடைந்தனர். இந்திய விமான படை ஆப்கானிஸ்தானில் இருந்த இந்தியர்களை அங்கிருந்து இந்தியா கொண்டுவந்தது.



எனினும், தற்போது வைரலாகும் புகைப்படம் சமீபத்தில் எடுக்கப்பட்டது இல்லை. மேலும் அது ஆப்கானிஸ்தானில் எடுக்கப்படவே இல்லை. உண்மையில் இந்த புகைப்படம் 2013 ஆம் ஆண்டு பிலிப்பைன்சில் எடுக்கப்பட்டது ஆகும். இந்த புகைப்படம் அமெரிக்க விமான படை மேற்கொண்ட மீட்பு நடவடிக்கையின் போது எடுக்கப்பட்டது ஆகும்.

போலி செய்திகளை பரப்பாதீர்கள். போலி செய்திகளால் பல்வேறு பாதிப்புகள் ஏற்படுகின்றன. சமயங்களில் போலி செய்தி பாதிப்பு காரணமாக உயிரிழப்புகளும் ஏற்பட்டு இருக்கின்றன.

Similar News