செய்திகள்
முதலமைச்சருடன் ஏ.சி.சண்முகம்

வேலூர் தேர்தல் - முதல் சுற்று முன்னிலை நிலவரம்

Published On 2019-08-09 03:35 GMT   |   Update On 2019-08-09 03:35 GMT
வேலூர் பாராளுமன்றத் தொகுதியில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வரும் நிலையில், முதல் சுற்று நிலவரத்தை பார்ப்போம்.
வேலூர்:

வேலூர் பாராளுமன்ற தொகுதிக்கான வாக்குப்பதிவு கடந்த 5-ம் தேதி நடந்தது. அ.தி.மு.க. கூட்டணி வேட்பாளர் ஏ.சி.சண்முகம், தி.மு.க. வேட்பாளர் கதிர் ஆனந்த், நாம் தமிழர் கட்சி வேட்பாளர் தீபலட்சுமி உள்பட 28 பேர் போட்டியிட்டனர்.
 
மொத்தம் 1,553 வாக்குச்சாவடி மையங்களில் வாக்குப்பதிவு நடந்தது. மொத்தம் 71.51 சதவீதம் வாக்குகள் பதிவாகின. மொத்தமுள்ள 14,32,555 வாக்காளர்களில் 10,24,352 பேர் வாக்களித்துள்ளனர்.

வாக்குப்பதிவு முடிவடைந்ததும் வாக்கு எந்திரங்கள் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் ராணிப்பேட்டை என்ஜினீயரிங் கல்லூரி வாக்கு எண்ணும் மையத்தில் வைக்கப்பட்டது. இன்று காலை 8 மணிக்கு பலத்த போலீஸ் பாதுகாப்புடன் வாக்கு எண்ணிக்கை தொடங்கியது. 

முதலில் தபால் வாக்குகள் எண்ணப்பட்டன. பின்னர் வாக்குப்பதிவு எந்திரத்தில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டன. துவக்கத்தில் அதிமுக கூட்டணி வேட்பாளர் ஏ.சி.சண்முகம் முன்னிலை பெற்றார். குறிப்பாக ஆம்பூர், வேலூர், குடியாத்தம், கே.வி.குப்பம் சட்டமன்றத் தொகுதிகளில் ஏ.சி.சண்முகம் அதிக வாக்குகள் பெற்று முன்னிலை வகித்தார். அணைக்கட்டு சட்டமன்றத் தொகுதியில் கதிர் ஆனந்த் முன்னிலை பெற்றிருந்தார். 

முதல் சுற்று முடிவில் ஏ.சி.சண்முகம் 25544 வாக்குகளும்,  திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த் 24064 வாக்குகளும் பெற்றிருந்தனர். நாம் தமிழர் கட்சி வேட்பாளர் தீபலட்சுமி 400 வாக்குகள் பெற்றிருந்தார். இதன்மூலம் ஏ.சி.சண்முகம் 1480 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலையில் இருந்தார். 

அடுத்த சுற்றிலும் துவக்கத்தில் ஏ.சி.சண்முகம் முன்னிலை பெற்றார். அதன்பின்னர் திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த் முன்னிலை பெறத் தொடங்கினார். 
Tags:    

Similar News