செய்திகள்
முத்தரசன்

மு.க.ஸ்டாலின் மீது வழக்கு- இந்திய கம்யூனிஸ்டு கட்சி கண்டனம்

Published On 2019-08-03 05:44 GMT   |   Update On 2019-08-03 07:20 GMT
இஸ்லாமிய பெருமக்களை திருமண மண்டபத்தில் ஸ்டாலின் சந்தித்து பேசினார் என்ற காரணத்திற்காக அவர் மீது போலீசார் வழக்கு போடப்பட்டதற்கு இந்திய கம்யூனிஸ்டு கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது.

சென்னை:

இந்தியக் கம்யூனிஸ்டு கட்சியின் மாநிலசெயலாளர் முத்தரசன் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

வேலூர் தொகுதியில், தி.மு.க வேட்பாளர் கதிர் ஆனந்த் வெற்றியை உறுதிப்படுத்தும் வகையில், தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் பிரசாரம் செய்து வருகின்றார்.

ஸ்டாலின் பிரச்சாரத்திற்கு சென்ற இடங்களில், தி.மு.க. மற்றும் தோழமை கட்சியினர் மட்டுமின்றி பொதுமக்களும் ஆயிரக்கணக்கில் திரண்டு வந்து தங்களது ஆதரவை அளித்து வருகின்றனர்.

இதனை சகித்து கொள்ள இயலாத ஆளும் அ.தி.மு.க., தனக்குள்ள ஆட்சி அதிகாரத்தை அதிகாரிகள் மூலம் தவறாக பயன்படுத்தி, வழக்குகளின் மூலம் அச்சுறுத்த தொடங்கியுள்ளது.

இஸ்லாமிய பெருமக்களை திருமண மண்டபத்தில் ஸ்டாலின் சந்தித்து பேசினார் என்ற காரணத்திற்காக, மண்டபத்தை மூடி சீல் வைத்துள்ளனர்.

மேலும் தி.மு.க. தலைவர் ஸ்டாலின், வேட்பாளர் கதிர்ஆனந்த், தோல் தொழிற்சாலை உரிமையாளர் பரிதாபாபு, ஜமாத் நிர்வாகி ஜக்ரியா ஆகிய நால்வர் மீதும் ஆம்பூர் நகர காவல் நிலையத்தில் பல்வேறு பிரிவுகளில் வழக்குபதிவு செய்யப்பட்டுள்ளது.


இத்தகைய நடவடிக்கையை மிக வன்மையாக கண்டிப்பதுடன் மண்டபத்திற்கு சீல் வைக்கப்பட்டதால் திருமணம் போன்ற பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெறுவதற்கு இடர் ஏற்படும்.

ஆதலால் சீல் அகற்றப்பட்டு மண்டபத்தை திறப்பதுடன் தி.மு.க. தலைவர் ஸ்டாலின் உள்ளிட்டவர்கள் மீது போடப்பட்டுள்ள வழக்குகளை திரும்ப பெற வேண்டுமென, இந்தியக் கம்யூனிஸ்டு கட்சி, தமிழ்நாடு மாநில செயற்குழு சார்பில் கேட்டுக் கொள்கிறோம்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Tags:    

Similar News