செய்திகள்
ஸ்டாலின், கதிர் ஆனந்த்

தனியார் மண்டபத்தில் அனுமதியின்றி கூட்டம் நடத்தியதாக ஸ்டாலின், கதிர் ஆனந்த் மீது வழக்குப்பதிவு

Published On 2019-08-02 03:05 GMT   |   Update On 2019-08-02 06:09 GMT
ஆம்பூரில் தனியார் மண்டபத்தில் அனுமதியின்றி கூட்டம் நடத்தியதாக தி.மு.க. தலைவர் ஸ்டாலின் மற்றும் வேட்பாளர் கதிர் ஆனந்த் மீது போலீசார் வழக்குபதிவு செய்துள்ளனர்.
வேலூர்:

பணப்பட்டுவாடா புகாரால் ரத்து செய்யப்பட்ட வேலூர் பாராளுமன்ற தேர்தல் வருகிற 5-ந் தேதி நடக்கிறது.

அ.தி.மு.க. கூட்டணி சார்பில் புதிய நீதிக்கட்சி தலைவர் ஏ.சி.சண்முகம், தி.மு.க. சார்பில் துரைமுருகன் மகன் கதிர்ஆனந்த், நாம் தமிழர் கட்சி சார்பில் தீபலட்சுமி உள்பட 28 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். அ.தி.மு.க., தி.மு.க. இடையே தான் நேரடி போட்டி உள்ளது.

தேர்தல் பிரசாரம் நாளை (சனிக்கிழமை) மாலை 6 மணியுடன் ஓய்கிறது. இன்னும் ஒரு நாள் மட்டுமே உள்ளதால் தலைவர்கள் பிரசாரத்தில் தீவிரமாக இறங்கியுள்ளனர்.

அ.தி.மு.க., தி.மு.க. சார்பில் வெளி மாவட்டங்களில் இருந்து ஏராளமான தொண்டர்கள் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

பாராளுமன்ற தேர்தலில் ஒரே இடத்தில் வெற்றிபெற்ற அ.தி.மு.க. கூட்டணி, 38 இடங்களில் வெற்றி பெற்ற தி.மு.க. கூட்டணிக்கு இது முக்கியமான தேர்தலாக அமைந்துள்ளது.

வேலூர் தொகுதியின் வெற்றி, தோல்வி சட்டமன்ற தேர்தலில் எதிரோலிக்கும் என இருகட்சியினரும் நம்புகின்றனர். இதையடுத்து வேலூர் தொகுதியை கட்சி தலைவர்கள் முற்றுகையிட்டு பிரசாரம் செய்து வருகின்றனர்.

முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஏற்கனவே 3 நாட்கள் தேர்தல் பிரசாரம் செய்தார். இன்று 2-ம் கட்ட பிரசாரத்தில் ஈடுபடுகிறார்.

துணை முதல்- அமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் நேற்றுடன் பிரசாரத்தை முடித்து விட்டார். அமைச்சர்கள் தொகுதி முழுவதும் சென்று ஆதரவு திரட்டி வருகிறார்கள்.

தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் கடந்த 27-ந்தேதி முதல் 3 நாட்கள் பிரசாரம் செய்தார். 2-ம் கட்ட பிரசாரத்துக்கு நேற்று முன்தினம் இரவு ஆம்பூர் வந்து தங்கினார்.

நேற்று ஆம்பூரை அடுத்த மோட்டு கொல்லையில் தனியார் தோல் தொழிற்சாலையில் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தோல்தொழிலாளர்கள் மத்தியில் பேசினார்.

பின்னர் ஆம்பூர் மார்க்கெட் பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் இஸ்லாமிய பிரமுகர்கள் பங்கேற்ற கூட்டத்தில் மு.க.ஸ்டாலின், வேட்பாளர் கதிர் ஆனந்துடன் கலந்து கொண்டு பேசினார்.

இந்த கூட்டத்திற்கு தேர்தல் ஆணையத்திடம் அனுமதி பெறவில்லை. இது தொடர்பாக தேர்தல் அதிகாரிகள் சார்பில் புகார் தெரிவிக்கப்பட்டது. கூட்டம் முடிந்ததும் மு.க.ஸ்டாலின் அங்கிருந்து புறப்பட்டு சென்றார்.

தேர்தல் பறக்கும் படையினர், துணை போலீஸ் சூப்பிரண்டு சச்சிதானந்தம், டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஹரிகிருஷ்ணன், தாசில்தார் சுஜாதா ஆகியோர் அங்கு சென்று பார்வையிட்டபோது கூட்டம் நடத்துவதற்கு அனுமதி பெற வில்லை என்று தெரிய வந்தது.

மண்டபத்தின் நிர்வாகி தேர்தல் ஆணையத்திற்கு தகவல் தெரிவிக்காத காரணத்தால் தாசில்தார் சுஜாதா முன்னிலையில் வருவாய்த் துறையினர் திருமண மண்டபத்தை பூட்டி சீல் வைத்தனர்.

இதுகுறித்து தாசில்தார் சுஜாதா ஆம்பூர் டவுன் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.

இதன் பேரில் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின், வேட்பாளர் கதிர்ஆனந்த் ஆகியோர் மீது 171 எப், 171 சி, 188 ஐபிசி ஆகிய 3 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்தனர்.

திருமண மண்டப உரிமையாளர் ஜக்ரியா, தோல்தொழிற்சாலை உரிமையாளர் பரீதாபாபு ஆகியோர் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டது.

கடந்த 5-ந்தேதி முதல் களை கட்டி வந்த வேலூர் பாராளுமன்ற தொகுதி தேர்தல் பிரசாரம் நாளை மாலை 6 மணியுடன் ஓய்கிறது. மாலை 6 மணிக்கு மேல் வேலூர் தொகுதியில் தங்கியுள்ள வெளியூர் ஆட்கள் வெளியேற உத்தரவிடப்பட்டுள்ளது.

தேர்தல் பிரசாரம் உச்ச கட்டத்தை எட்டியுள்ள நிலையில் மு.க.ஸ்டாலின் உட்பட 4 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Tags:    

Similar News