செய்திகள்
முக ஸ்டாலின்

முத்தலாக் விவகாரத்தில் அ.தி.மு.க. இரட்டை வேடம் போடுகிறது - மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு

Published On 2019-08-01 20:22 GMT   |   Update On 2019-08-01 20:22 GMT
முத்தலாக் விவகாரத்தில் அ.தி.மு.க. இரட்டை வேடம் போடுகிறது என்று வேலூர் தேர்தல் பிரசாரத்தில் மு.க.ஸ்டாலின் குற்றம்சாட்டினார்.
வேலூர்:

வேலூர் தொகுதி நாடாளுமன்ற தேர்தலில் தி.மு.க. சார்பில் போட்டியிடும் வேட்பாளர் கதிர் ஆனந்தை ஆதரித்து நேற்று இஸ்லாமிய கட்சிகளை சார்ந்த தலைவர்கள் முன்னிலையில் தி.மு.க. தலைவரும், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின் பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

இன்றைக்கு இருக்கக்கூடிய நிலை என்னவென்று தயவுசெய்து நினைத்து பாருங்கள். முத்தலாக் என்ற ஒரு கொடுமையான மசோதாவைக் கொண்டு வந்து, நாடாளுமன்றத்திலும் அதைத்தொடர்ந்து மாநிலங்களவையிலும் நிறைவேற்றி முடித்த நேற்றைய தினம் ஜனாதிபதியும் கையெழுத்துப் போட்டிருக்கக்கூடிய ஒரு அக்கிரமம் நடந்து முடிந்திருக்கின்றது. அதை நாம் கடுமையாக தொடர்ந்து எதிர்த்து கொண்டிருக்கின்றோம். நம்முடைய தேர்தல் வாக்குறுதிகளும் அதனை எடுத்துச் சொல்லியிருக்கின்றோம்.

நாம் மட்டுமல்லாமல் ஆளும் கட்சியில் இருக்கக்கூடிய அ.தி.மு.க.வினரும் தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்டுச் சொல்லி இருக்கின்றார்கள். 5 மாதங்களுக்கு முன்பு ராமநாதபுரம் மாவட்டத்தில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட முஸ்லிம் சமுதாயத்தைச் சேர்ந்த அ.தி.மு.க.வின் நாடாளுமன்ற உறுப்பினர் அன்வர் ராஜா அப்பொழுது இந்த முத்தலாக் மசோதா வரக்கூடாது. வந்தால் எங்கள் சமுதாயத்திற்கு மிகப்பெரிய பாதிப்பு ஏற்படும் என்று கடுமையாக எதிர்த்துப் பேசியிருந்தார்.

ஆனால், இப்பொழுது நாடாளுமன்றத்தில் துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்தின் மகன், தேனியின் நாடாளுமன்ற உறுப்பினர், மத்தியில் ஆளக்கூடிய பா.ஜ.க. அரசு கொண்டுவரும் இந்த மசோதாவை ஆதரித்து பேசி இருக்கின்றார்.

இவர் பேசியதும் அடுத்த நாள் அ.தி.மு.க. அமைச்சர்களுள் முக்கியமான ஒருவர் என்ன சொல்கின்றார் என்றால் ‘நாக்கு தவறி’ பேசிவிட்டார் என்று சொல்கின்றார். ஏதாவது தேதியை மாற்றி பேசினால், இல்லை பெயரை ஏதாவது மாற்றி பேசினால் அவ்வாறு சொல்லலாம். ஆனால், இந்த சட்டத்தை மத்திய அரசு ஏன் கொண்டுவர வேண்டும் என்று தொடர்ந்து ஒரு மிகப்பெரிய விளக்கத்தைக் கொடுத்திருக்கின்றார். அது நாக்கு தவறுதலா?. அதைத்தான் தயவுசெய்து நீங்கள் நினைத்துப் பார்க்க வேண்டும். எனவே இரட்டைவேடம் போடுகின்றது.

மாநிலங்களவையில் அ.தி.மு.க.வின் ராஜ்யசபா எம்.பி. நவநீதகிருஷ்ணன் இந்த சட்டம் வரக்கூடாது என்று கடுமையாக எதிர்த்துப் பேசியிருக்கின்றார். உள்ளபடியே மகிழ்ச்சியாக இருந்தது. தி.மு.க. மட்டுமல்ல ஆளும் கட்சியாக இருக்கக்கூடிய அ.தி.மு.க.வும் எதிர்க்கப் போகின்றது என்று நாம் நினைத்துக் கொண்டிருந்தோம். பேசிவிட்டு கடைசியில் என்ன செய்கின்றார்கள் என்றால் ஓட்டுப்போடும் பொழுது வெளிநடப்பு செய்திருக்கின்றார்கள். ராஜ்ய சபாவில் இருக்கக்கூடிய அ.தி.மு.க. எம்.பி.க்கள் எதிர்த்து ஓட்டு போட்டிருந்தார்கள் என்றால் இந்த சட்டம் வெற்றி பெற்றிருக்க வாய்ப்பு இருந்திருக்காது. ஆனால் என்ன செய்திருக்கின்றார்கள் என்றால் ஆதரித்தும் ஓட்டுப் போடாமல், எதிர்த்தும் ஓட்டு போடாமல் வெளிநடப்பு செய்து விட்டார்கள்.



வெளிநடப்பு செய்கின்ற பொழுது அந்த ஓட்டை கணக்கில் எடுத்துக்கொள்ள மாட்டார்கள். அவையில் இருக்கக்கூடியவர்களை வைத்துதான் ஒட்டுமொத்தமாக கணக்கெடுத்து யார் ஆதரித்து ஓட்டுப் போட்டார்கள் எதிர்த்து ஓட்டுப் போட்டார்கள் என்று கணக்கெடுத்து சொல்வார்கள். ஏன் வெளிநடப்பு செய்தார்கள் என்றால், மோடி கோபித்துக்கொள்வார். மோடி கோபித்துக் கொண்டால் என்ன நடக்கும். இங்கு இந்த ஆட்சி இருக்காது.

எனவே வேலூரில் நடக்கக்கூடிய இந்தத் தேர்தலில் இஸ்லாமிய சமுதாய மக்களின் ஓட்டுக்களை எல்லாம் வாங்க வேண்டும் என்ற நாடகம் போட்டு எதிர்த்துப் பேசி விட்டார்கள். ஆனால் மோடியை சமாதானம் செய்ய வேண்டும் என்பதற்காக ஓட்டு போடாமல் வெளியில் வந்து விட்டார்கள். எனவே, தமிழ்நாட்டில் எப்படி இரட்டையர்கள் ஆட்சி நடந்து கொண்டிருக்கின்றதோ? அதேபோல் இதிலும் இரட்டை வேடம் போடக் கூடிய நிலை இன்றைக்கும் இருந்து கொண்டிருக்கின்றது. இதைப்பற்றி எல்லாம் உங்களுக்கு அதிகம் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை. இருந்தாலும் இதனை உங்களுக்கு நினைவுபடுத்தி உங்களுக்காக பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட சமுதாயத்திற்கு மட்டுமல்ல, சிறுபான்மையின மக்களுக்கும் தொடர்ந்து பாடுபடக்கூடிய பணியாற்றிக்கொண்டிருக்கக்கூடிய தி.மு.க.வுக்கு என்றைக்கும் நீங்கள் துணை நிற்க வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.
Tags:    

Similar News