செய்திகள்
வேலூரில் டி.ராஜா பேசிய காட்சி.

இரட்டை தலைமையால் அதிமுக நெருக்கடியில் தவிக்கிறது- டி.ராஜா பேச்சு

Published On 2019-08-01 10:43 GMT   |   Update On 2019-08-01 10:43 GMT
வேலூர் தொகுதியில் அ.தி.மு.க.வுக்கு கொடுக்கும் தோல்வி பிரதமர் மோடிக்கு எச்சரிக்கை மணியாக அமைய வேண்டும் என்று வேலூரில் நடந்த கூட்டத்தில் இந்திய கம்யூனிஸ்டு கட்சி பொதுச்செயலாளர் டி.ராஜா பேசினார்.

வேலூர்:

வேலூர் நாடாளுமன்ற தொகுதியில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் போட்டியிடும் தி.மு.க. வேட்பாளர் கதிர் ஆனந்தை ஆதரித்து வேலூர் அண்ணா கலையரங்கம் அருகில் இந்திய கம்யூனிஸ்டு கட்சி சார்பில் தேர்தல் பிரசார கூட்டம் நடந்தது. கூட்டத்துக்கு மாநகர செயலாளர் சிம்புதேவன் தலைமை தாங்கினார்.

இதில் இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் அகில இந்திய பொதுச்செயலாளர் டி.ராஜா கலந்துகொண்டு பேசினார். அவர் பேசியதாவது:-

தமிழ்நாட்டில் ஆளும் அ.தி.மு.க. அரசு ஒற்றைத் தலைமையா, இரட்டை தலைமையா என்ற நெருக்கடியில் இருக்கிறது. மேலும் மோடியால் ஆட்டுவிக்கும் எடுபிடி அரசாக, கையாலாகாத அரசாக உள்ளது. இந்த அரசால் தமிழகத்தின் உரிமையை காப்பாற்ற முடியவில்லை. மக்கள் நம்பிக்கையை இழந்துவிட்டது.

பா.ஜ.க. அரசு ஆர்.எஸ்.எஸ்.சின் கருவியாக உள்ளது. வேலூர் மாவட்டத்தில் இந்து, முஸ்லிம், கிறிஸ்தவர்கள் ஒன்றாக கலந்து பழகுகிறார்கள். இந்த நிலை நீடிக்குமா என்பது கேள்விக்குறியாகி இருக்கிறது. பா.ஜ.க. மதவெறியை தூண்டிவிட்டு பிரிக்க முயற்சிக்கிறது.

பா.ஜ.க.வுடன் அ.தி.மு.க. இணைந்து இரட்டை வேடம் போட்டு மக்களை ஏமாற்றுகிறது. பிரதமர் மோடி ஆட்சியில் அரசியல் சட்டம் மதிக்கப்படவில்லை. தலித் மக்கள் மீது அடக்குமுறை, கும்பல் கொலை நடக்கிறது. மதச்சார்பற்ற ஜனநாயகம் பறிக்கப்பட்டு ஆர்.எஸ்.எஸ். தமிழ்நாட்டில் காலூன்ற முயற்சிக்கிறது. அதற்கு அ.தி.மு.க. துணை போகிறது. எனவே அ.தி.மு.க.வுக்கு தோல்வியை கொடுத்து பாடம் புகட்ட வேண்டும்.


வேலூரில் அ.தி.மு.க.வுக்கு கொடுக்கும் தோல்வி மோடிக்கு எச்சரிக்கை மணியாக அமைய வேண்டும். ஆந்திரா, கேரளா போன்ற பா.ஜ.க. ஆட்சி இல்லாத மாநிலங்களில் ஆட்சியை கவிழ்க்கும் வேலையில் பா.ஜ.க. இறங்கி உள்ளது.

வருமானவரித்துறை, சி.பி.ஐ. போன்ற அமைப்புகளை வைத்து பல கட்சிகளை நிர்ப்பந்தித்து, அந்த கட்சி உறுப்பினர்களை கட்சிமாற செய்கிறது. இதற்கு பா.ஜ.க.வுக்கு ஒரு எச்சரிக்கை கொடுக்க வேண்டும். அ.தி.மு.க. ஆட்சிக்கும் பாடம் புகட்ட வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

Tags:    

Similar News