செய்திகள்
கதிர் ஆனந்த்- ஏசி சண்முகம்

வேலூர் தொகுதி தேர்தல்- ஏ.சி.சண்முகம், கதிர் ஆனந்த் வேட்புமனு பரிசீலனை நிறுத்தி வைப்பு

Published On 2019-07-19 07:30 GMT   |   Update On 2019-07-19 07:30 GMT
வேலூர் மக்களவை தொகுதியில் போட்டியிட ஏ.சி.சண்முகம் மற்றும் கதிர்ஆனந்த் ஆகியோர் தாக்கல் செய்திருந்த வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை நிறுத்தி வைக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
வேலூர்:

வேலூர் பாராளுமன்ற தொகுதி தேர்தல் வருகிற 5-ந் தேதி நடக்கிறது. 11-ந் தேதி வேட்புமனுதாக்கல் தொடங்கி நேற்றுடன் முடிவடைந்தது. மொத்தம் 50 பேர் மனுத்தாக்கல் செய்துள்ளனர்.

மனுக்கள் பரிசீலனை வேலூர் கலெக்டர் அலுவலகத்தில் கலெக்டரும் தேர்தல் அலுவலவருமான சண்முகசுந்தரம் தலைமையில் இன்று நடந்தது.

அ.தி.மு.க. சார்பில் மாவட்ட பொருளாளர் மூர்த்தி, வக்கீல்கள், தி.மு.க. வேட்பாளர் கதிர்ஆனந்த், முன்னாள் அமைச்சர் துரைமுருகன், மாவட்ட செயலாளர் நந்தகுமார் மற்றும் வக்கீல்கள் கலந்து கொண்டனர்.

மற்றும் சுயேட்சை வேட்பாளர்களும் அவரது ஆதரவாளர்களும் பங்கேற்றனர்.

அ.தி.மு.க. கூட்டணி வேட்பாளர் ஏ.சி. சண்முகம் வேட்புமனு பரிசீலனை செய்யப்பட்டது.

அப்போது சுயேட்சை வேட்பாளர் ரவி என்பவர் அ.தி.மு.க. கூட்டணி வேட்பாளர் ஏ.சி.சண்முகம் புதிய நீதிக்கட்சியின் தலைவராக உள்ளார். அ.தி.மு.க. அடிப்படை உறுப்பினராக இல்லாத அவர் எப்படி இரட்டைஇலை சின்னத்தில் போட்டியிட முடியும். எனவே அவர் மனுவை நிராகரிக்க வேண்டும் என்றார்.

கடந்த தேர்தலில் அவர் மனு ஏற்கபட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர். அப்போது யாரும் இதற்கு எதிர்ப்பு தெரிவித்திருக்க மாட்டார்கள் என்று சுயேட்சை வேட்பாளர் கூறினார். இதனால் அங்கு சலசலப்பு ஏற்பட்டது. இதையடுத்து ஏ.சி.சண்முகம் மனு பரிசீலனை நிறுத்தி வைக்கபட்டதாக அறிவிக்கபட்டது. இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.



ஏ.சி.சண்முகம் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட முடிவு செய்தபோது அவர் அ.தி.மு.க.வில் அடிப்படை உறுப்பினராக சேர்க்கப்பட்டுள்ளார். அதற்கான உறுப்பினர் அட்டை அவருக்கு வழங்கப்பட்டுள்ளது. வேட்புமனுவில் அனைத்து விவரங்களும் சரியாக கொடுக்கப்பட்டுள்ளது.

அவர் மனு பரிசீலனையை தள்ளி வைக்க வேண்டிய அவசியம் இல்லை என அ.தி.மு.க. நிர்வாகிகள் கூறினர்.

ஏ.சி.சண்முகம் அ.தி.மு.க. அடிப்படை உறுப்பினர் இல்லாமல் இருந்தாலும் பரவாயில்லை அவர் கூடுதலாக ஒரு படிவம் பூர்த்தி செய்து கொடுத்தால் போதும் மனு ஏற்றுக்கொள்ளப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

இந்நிலையில் தி.மு.க. வேட்பாளர் கதிர்ஆனந்த் வேட்பு மனு மீதான பரிசீலனையும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

பணப்பட்டுவாடா புகார் இருப்பதால் கதிர் ஆனந்த் வேட்புமனுவை நிராகரிக்க வேண்டும் என சுயேட்சை வேட்பாளர் ஒருவர் எதிர்ப்பு தெரிவித்ததால் வேட்பு மனு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
Tags:    

Similar News