செய்திகள்

23-ந்தேதி மோடி அதிகார பீடத்தில் இருந்து அகற்றப்படுவார் - வைகோ

Published On 2019-05-06 12:49 IST   |   Update On 2019-05-06 13:21:00 IST
வருகிற 23-ந்தேதி ஓட்டு எண்ணிக்கையின் போது ஆட்சி அதிகார பீடத்தில் இருந்து பிரதமர் மோடி அகற்றப்படுவார் என்று வைகோ கூறினார். #MDMK #Vaiko

சென்னை:

ம.தி.மு.க.வின் 26-வது ஆண்டு தொடக்க விழா எழும்பூரில் உள்ள தாயகத்தில் இன்று நடந்தது.  பெரியார், அண்ணா சிலைகளுக்கு ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ மாலை அணிவித்து கட்சி கொடி ஏற்றி தொண்டர்களுக்கு இனிப்பு வழங்கினார்.

துணை பொதுச் செயலாளர் மல்லை சத்யா, மாவட்ட தலைவர் சு.ஜீவன், கழக குமார், பூங்கா நகர் ராம்தாஸ், முராக்புகாரி, தென்றல் நிசார், மல்லிகா தயாளன், உள்பட பலர் கலந்துகொண்டனர்.

ம.தி.மு.க. தொடங்கப்பட்டு 25 ஆண்டுகளை கடந்து இன்று 26-ம் ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளது. பல்வேறு சோதனைகள், இன்னல்களை கடந்து தொண்டர்களின் உழைப்பால் வெற்றி நடைபோட்டு வருகிறது.

 


வருகிற 23-ந்தேதி ஓட்டு எண்ணிக்கையின் போது ஆட்சி அதிகார பீடத்தில் இருந்து பிரதமர் மோடி அகற்றப்படுவார். 39 தொகுதிகளில் தி.மு.க. கூட்டணி வெற்றிபெறும். 18 சட்டமன்ற தொகுதிகளிலும், நடைபெற இருக்கிற 4 தொகுதி இடைத்தேர்தலிலும் வெற்றிபெறுவோம்.

தமிழகத்தில் ஆட்சிமாற்றம் ஏற்படும். 25 ஆண்டுகால வரலாற்றில் பல எண்ணற்ற போராட்டங்களில் ம.தி.மு.க. பங்கேற்றுள்ளது.

‘ஸ்டெர்லைட் ஆலை’ மூடப்பட்டதன் மூலம் பிரதான வெற்றி ம.தி.மு.க.வுக்கு கிடைத்துள்ளது. தன்னலமற்ற சேவை இயக்கமாக ம.தி.மு.க. செயல்பட்டு வருகிறது. ம.தி.மு.க.வின் காவல் தெய்வமாக தொண்டர்கள் இருக்கிறார்கள்.

இலங்கையில் தமிழ் ஈழம் அமைய வேண்டும். பொது வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும். தமிழகத்திற்கு வர வேண்டிய பல்வேறு திட்டங்கள் ஊழல் அரசின் அணுகு முறையால் கிடைக்கப்பெறவில்லை. 80 லட்சம் இளைஞர்கள் வேலை இழந்துள்ளனர்.

குழந்தைகள் கடத்தப்படுகிறார்கள், இளம் பெண்கள், கல்லூரி மாணவிகள் பாலியல் கொடுமைகளுக்கு ஆளாக்கப்படுகிறார்கள். ஜனநாயக உரிமை, மக்கள் நலன் காற்றில் பறக்கவிடப் பட்டுள்ளது. ஊழல் மலிந்த அரசாக தமிழக அரசு செயல்பட்டு வருகிறது.

இவ்வாறு வைகோ பேசினார். #MDMK #Vaiko

Similar News