செய்திகள்
ஒட்டப்பிடாரம் தொகுதி தருவைகுளத்தில் பொதுமக்களிடம் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி வாக்கு சேகரித்த காட்சி.

சினிமாவில் மார்க்கெட் போனதால் கமல்ஹாசன் அரசியலுக்கு வந்துள்ளார்- அமைச்சர் ராஜேந்திர பாலாஜி

Published On 2019-05-06 04:39 GMT   |   Update On 2019-05-06 04:39 GMT
சினிமாவில் மார்க்கெட் போனதால் கமல்ஹாசன் அரசியலுக்கு வந்துள்ளதாக அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கூறியுள்ளார். #RajendraBalaji #KamalHaasan
ஒட்டப்பிடாரம்:

ஒட்டப்பிடாரம் தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர் மோகனுக்கு ஆதரவாக அமைச்சர் ராஜேந்திரபாலாஜி கடந்த 10 நாட்களுக்கும் மேலாக தொகுதியில் தங்கி தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார். புதியம்புத்தூர் சீனிவாசன் நகரில் வாக்குச்சாவடி முகவர்கள், நிர்வாகிகளிடம் அமைச்சர் ஆலோசனை நடத்தினார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

விருதுநகர் அல்லம்பட்டியில் காமராஜர் சிலை அருகே மதுக்கடை இருப்பதாக நாம் தமிழர் கட்சி காளியம்மாள் புகார் தெரிவித்திருந்தார். அந்த புகாரை தொடர்ந்து அந்த கடையை உடனடியாக அகற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டது. நேற்று இரவே அந்த டாஸ்மாக் கடை அகற்றப்பட்டது. தமிழகம் முழுவதும் இது போன்று தலைவர்களின் சிலையின் அருகே கடைகள் இருந்தால் எங்கள் கவனத்திற்கு வந்தால் அந்த மதுக்கடைகளை அகற்ற நடவடிக்கை எடுக்கப்படும்.

தருவைகுளம் கிராமத்தில் தி.மு.க.வுக்கு வாக்களித்த ஒரு பெரியவர் என்னிடம் கூறும்போது கருணாநிதி மரணத்திற்கு விசாரணை நடத்த வேண்டும் என்றார். தேர்தல் முடிந்தவுடன் இது குறித்து தமிழக முதல்வர் விசாரணை ஆணையம் அமைத்து விசாரிக்க உத்தரவிடுவார். ஒட்டப்பிடாரம் தொகுதி மக்கள் என்றுமே அ.தி.மு.க. விசுவாசிகள். இந்த தேர்தலிலும் இரட்டை இலை சின்னத்திற்கு வாக்களித்து அ.தி.மு.க. வேட்பாளர் மோகனை மாபெரும் வெற்றி பெற செய்ய வைப்பார்கள்.


கமல்ஹாசனுக்கு 65 வயதுக்கு பிறகு அரசியல் ஞானம் பிறந்துள்ளது. ஓடி, ஆடி விளையாடிய வயதில் உல்லாசமாக இருந்துவிட்டு தற்போது மார்க்கெட் போனதால் அரசியலுக்கு வந்துள்ளார். பிரசாரத்திற்கு வடிவேலு வந்தால் கூட அவரைப் பார்க்க கூட்டம் சேரத்தான் செய்யும். அதுபோலதான் கமல்ஹாசனை பார்ப்பதற்காக இப்போது மக்கள் வருவார்கள். ஆனால் அவரது கட்சிக்கு வாக்களிக்க மாட்டார்கள்.

இவ்வாறு அவர் கூறினார். #RajendraBalaji #KamalHaasan
Tags:    

Similar News