செய்திகள்

மதுரை பாராளுமன்ற தொகுதிக்கு மறு தேர்தல் நடத்த வேண்டும் - சுயேச்சை வேட்பாளர் வழக்கு

Published On 2019-04-27 05:31 GMT   |   Update On 2019-04-27 05:31 GMT
மதுரை பாராளுமன்ற தொகுதிக்கு மறு தேர்தல் நடத்த வேண்டும் என்று சுயேச்சை வேட்பாளர் பசும்பொன் பாண்டியன் வழக்கு தொடர்ந்துள்ளார். #ParliamentEelection #HCMaduraiBench

மதுரை:

மதுரை பாராளுமன்ற தேர்தலில் சுயேச்சையாக போட்டியிட்ட அண்ணா திராவிட மக்கள் முன்னேற்ற கழக பொதுச்செயலாளர் வக்கீல் பசும்பொன் பாண்டியன் மதுரை ஐகோர்ட்டு கிளையில் மனுத்தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில் அவர் கூறியிருப்பதாவது:-

நான் மதுரை பாராளுமன்ற தேர்தலில் சுயேச்சையாக போட்டியிட்டேன். கடந்த 18-ந்தேதி ஓட்டுப்பதிவு நடந்தது. பதிவான ஓட்டுப்பெட்டிகள் அனைத்தும் மதுரை மருத்துவக் கல்லூரி அரங்கில் வைக்கப்பட்டுள்ளது.

3 அடுக்கு பாதுகாப்பு கொண்ட அங்கு கடந்த வாரம் பெண் அதிகாரி மற்றும் ஊழியர்கள் 3 பேர் சட்ட விரோதமாக சென்றுள்ளனர். 3 மணி நேரம் அங்கு இருந்துள்ளனர்.

இந்த விவகாரத்தில் சம்பந்தப்பட்ட அதிகாரி மற்றும் ஊழியர்கள் மீது சஸ்பெண்டு நடவடிக்கை மட்டுமே எடுக்கப்பட்டுள்ளது. தேர்தல் நடத்தும் அலுவலர் மாவட்ட கலெக்டர் நடராஜன் மற்றும் தேர்தல் அலுவலர்கள் இந்த விவகாரத்தை மூடி மறைக்க முயற்சி செய்கிறார்கள். சட்டம் - ஒழுங்கு சம்பந்தப்பட்ட இந்த சம்பவம் குறித்து போலீஸ் கமி‌ஷனர் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

எனவே மதுரை வாக்கு எண்ணும் மையத்தில் நடந்த சம்பவம் குறித்து முழுமையான விசாரணை நடத்தி சம்பந்தப்பட்ட நபர்கள் மீது கிரிமினல் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் மதுரை பாராளுமன்ற தொகுதிக்கான தேர்தலை ரத்து செய்து விட்டு மறு தேர்தல் நடத்த உத்தரவிட வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

இந்த மனு விரைவில் விசாரணைக்கு வர உள்ளது. #ParliamentEelection #HCMaduraiBench

Tags:    

Similar News