செய்திகள்

வாக்கு மையத்துக்கு முன்பு விளம்பரம் செய்யக்கோரிய வழக்கு தள்ளுபடி

Published On 2019-04-11 08:15 GMT   |   Update On 2019-04-11 08:15 GMT
ஓட்டுக்கு பணம் வாங்குவது தண்டனைக்குரிய குற்றம் என அனைத்து வாக்குச் சாவடிகள் முன்பும் விளம்பர பலகைகள் வைக்க கோரிய பொதுநல வழக்கை சென்னை ஐகோர்ட் தள்ளுபடி செய்துள்ளது. #LoksabhaElections2019 #HighCourt
சென்னை:

சென்னை ஐகோர்ட்டில், வக்கீல் சூரியபிரகாசம் என்பவர் தாக்கல் செய்துள்ள மனுவில் கூறி இருப்பதாவது:-

பூந்தமல்லியில் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்ட தமிழக முதல்-அமைச்சர், தமிழக அரசு அறிவித்த ரூ. 2 ஆயிரம் தேர்தலுக்கு பின்பு வழங்கப்படும்’ என்று கூறியுள்ளார். இது மறைமுகமாக தங்களுக்கு வாக்களிக்க வேண்டும் என வாக்காளர்களை மிரட்டுவதற்கு சமமாகும்.

தேர்தலில் போட்டியிடும் கட்சிகள் மற்றும் வேட்பாளர்கள் வாக்குகளை பெற வாக்காளர்களுக்கு சட்ட விரோதமாக பணம் வழங்குவது தேர்தல் நடைமுறையை கேலிக்கூத்தாக்கி விடும்.

தமிழகம் முழுவதும் வாக்கு சேகரிக்க செல்லும் வேட்பாளர்கள் தங்களுக்கு ஆரத்தி எடுக்கும் வாக்காளர்களுக்கு ஒவ்வொரு முறையும் ரூ.500 பணமாக வழங்குவதாகவும், இது தேர்தல் ஆணையத்துக்கு தெரிந்தே நடைபெறுகிறது.

ஓட்டுக்கு பணம் கொடுப்பதும், பெறுவதும் தண்டனைக்குரிய குற்றம் என அனைத்து வாக்கு சாவடிகளிலும் விளம்பர பலகைகள் வைக்க இந்திய தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிட வேண்டும்.

இவ்வாறு அவர் கூறியிருந்தார்.

இந்த வழக்கை நீதிபதிகள் மணிக்குமார், சுப்பிரமணியம் பிரசாத் ஆகியோர் விசாரித்தனர்.

இதேபோன்ற கோரிக்கைகளுடன் வக்கீல் ரமேஷ் என்பவரும் வழக்கு தொடர்ந்தார். அப்போது, தேர்தல் ஆணையம் சார்பில் ஆஜரான வக்கீல், பணப்பட்டுவாடாவை தடுப்பதற்கும், பணப்பட்டுவாடா குறித்த புகார்களில் தேர்தல் அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுப்பது குறித்தும் அறிவுறுத்தல்கள் வழங்கியிருப்பதாக இந்திய தேர்தல் ஆணையம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

மேலும் பொதுமக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் தொடர் நிகழ்ச்சிகளை நடத்தி வருவதாகவும், துண்டறிக்கைகள் வழங்கி வருவதாகவும் கூறினார்.

இந்த விளக்கத்தை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள், சூரியபிரகாசம் தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர். #LoksabhaElections2019 #HighCourt
Tags:    

Similar News