சாலையோரம் இருந்த கல்லின் மீது மோட்டார் சைக்கிள் மோதி வாலிபர் பலி
- இரு சக்கர வாகனத்தில் மணலூர்- கொப்பகரை சாலையில் சென்றுள்ளனர்.
- மருத்துவர்கள் சக்திவேல் என்பவர் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினர்.
பாப்பிரெட்டிப்பட்டி,
தருமபுரி மாவட்டம் வே.முத்தம்பட்டி அருகே உள்ள ஆலமரத்து கொட்டாய் பகுதியை சார்ந்த குழந்தை சாமி மகன் சக்திவேல் (வயது22). இவரது நண்பர் நல்லம்பள்ளி அருகே உள்ள பூதனஅள்ளியைச் சேர்ந்த அனுமந்தன் மகன் மூர்த்தி (22). நண்பர்களான இருவரும் கூலித் தொழில் செய்து வருகின்றனர்.
இந்த நிலையில் நேற்று மாலை நல்லம்பள்ளியை சேர்ந்த மூர்த்தி தனது நண்பனை பார்ப்பதற்கு பொம்மிடி அருகே உள்ள மணலூர் பகுதிக்கு வந்துள்ளார், பின்னர் இருவரும் இரவு இரு சக்கர வாகனத்தில் அதிவேகமாக மணலூர்- கொப்பகரை சாலையில் சென்றுள்ளனர்.
அப்போது வளைவான பகுதியில் கட்டுப்பாட்டை இழந்த இருசக்கர வாகனம், சாலை ஓரத்தில் இருந்த முட்டு கல்லில் மோதி விபத்துக்குள்ளானது. இதில் சக்திவேல் மற்றும் மூர்த்தி ஆகிய இருவரும் தூக்கி வீசப்பட்டனர். இதில் படுகாயம் அடைந்த இருவரையும் இவர்களது நண்பன் பூவரசன் என்பவர் மீட்டு பாப்பிரெட்டிப்பட்டி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றார்.
அங்கு இருவரையும் பரிசோதித்த மருத்துவர்கள் சக்திவேல் என்பவர் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினர்.
அவரது நண்பர் மூர்த்தி தருமபுரி அரசு மருத்துவ மனையில் மேல் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த விபத்து குறித்து பொம்மிடி போலீஸ் இன்ஸ்பெக்டர் (ெபாறுப்பு) லதா உத்தரவின் பேரில், சப்-இன்ஸ்பெக்டர் விக்னேஷ் ஆகியோர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.