உள்ளூர் செய்திகள்
லாரி சாய்ந்த விபத்தில் உடல் நசுங்கி தொழிலாளி சாவு
- பாலை ஊற்றி விட்டு திரும்பி வீட்டிற்கு வந்து கொண்டிருந்தார்.
- லாரியின் அடிப்பக்கத்தில் சிக்கி பொன்முடி உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தார்.
மொரப்பூர்,
தருமபுரி மாவட்டம், கம்பைநல்லூர் அருகே உள்ள சின்னாகவுண்டம் பட்டி கிராமத்தை சேர்ந்தவர் பொன்முடி (வயது 52). இவர் நேற்று இரவு அண்ணா மலைப்பட்டி கிராமத்திற்கு சென்று பாலை ஊற்றி விட்டு திரும்பி வீட்டிற்கு வந்து கொண்டிருந்தார். அப்போது சாலையை கடக்க சாலையோரம் நின்று கொண்டு இருந்தார்.
அப்போது மொரப்பூரை நோக்கி உருளை கிழங்கு பாரம் ஏற்றி வந்த லாரி எதிர்பாராத விதமாக இவர் மீது சாய்ந்தது. இதில் லாரியின் அடிப்பக்கத்தில் சிக்கி பொன்முடி உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தார்.
இது குறித்து தகவல் அறிந்த அரூர் தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று லாரியின் அடிப்பக்கம் சிக்கிய உடலை கிரேன் உதவியுடன் மீட்டு உடலை பிரேத பரி சோதனைக்காக அரூர் அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.