கே.கே.நகர் அருகே மூதாட்டிக்கு சமையல் செய்து கொடுத்து நகை பறித்த பெண்
- பெண் மூதாட்டியை அமர வைத்துவிட்டு வீட்டு வேலை மற்றும் சமையல் செய்து கொடுத்து அவரை சாப்பிட வைத்தார்.
- திடீரென காந்தி அணிந்திருந்த 1½ பவுன் செயினை பறித்த அந்த பெண் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார்.
போரூர்:
சென்னை கே.கே.நகர் அடுத்த விஜயராகவபுரம் 5-வது தெருவை சேர்ந்தவர் காந்தி (வயது 85). தனியாக வசித்து வரும் மூதாட்டி காந்தியின் வீட்டிற்கு நேற்று காலை 40 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் வந்தார். மேலும் தன்னை உறவுக்கார பெண் என்று கூறி மூதாட்டி காந்தியிடம் அறிமுகம் செய்து கொண்டார்.
இதை உண்மை என்று நம்பிய காந்தி அவரை வீட்டிற்குள் அனுமதித்தார். பின்னர் அந்த பெண், மூதாட்டியை அமர வைத்துவிட்டு வீட்டு வேலை மற்றும் சமையல் செய்து கொடுத்து அவரை சாப்பிட வைத்தார்.
பின்னர் அந்த பெண் அவரது அருகில் அமர்ந்து பேச்சுக் கொடுத்து கொண்டு இருந்தார். அப்போது திடீரென காந்தி அணிந்திருந்த 1½ பவுன் செயினை பறித்த அந்த பெண் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார்.
இதனால் அதிர்ச்சி அடைந்த மூதாட்டி காந்தி கூச்சலிட்டார். இதையடுத்து அக்கம்பக்கத்தினர் அங்கு விரைந்து வந்தனர். அப்போது மூதாட்டியிடம் நகை பறிக்கப்பட்டது தெரியவந்தது. இதுகுறித்து கே.கே.நகர் போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்குப்பதிவு செய்து கண்காணிப்பு கேமரா பதிவுகளை கொண்டு மர்ம பெண்ணை தேடி வருகின்றனர்.