உள்ளூர் செய்திகள்

நத்தம் தாசில்தாரிடம் இறந்தவரின் மனைவி மனு அளித்தார்.

நத்தத்தில் வெளிநாட்டில் இறந்த கணவரின் உடலை மீட்க தாசில்தாரிடம் பெண் மனு

Published On 2023-08-01 13:39 IST   |   Update On 2023-08-01 13:39:00 IST
  • இதே ஊரைச் சேர்ந்த ஈராக் நாட்டில் வேலை பார்க்கும் ஒருவரை தொடர்பு கொண்டு விசாரித்த போது உங்கள் கணவர் தூக்கு மாட்டி தற்கொலை செய்துகொண்டதாக தெரிவித்துள்ளார்.
  • கோகிலா தனது கணவரின் இறப்பிற்கான காரணமும், இறந்த தனது கணவரின் உடலை இந்தியா கொண்டுவர மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டி மனு அளித்தார்.

நத்தம்:

திண்டுக்கல் மாவட்டம் நத்தம் மூங்கில் பட்டியைச் சேர்ந்தவர் பதினெட்டாம் மகன் சின்னையா (வயது 45) . கம்பி கட்டும் தொழிலாளி. இவருக்கு திருமணம் ஆகி கோகிலா என்ற மனைவியும் மாரிச்செல்வம் (வயது 14), கவிவரதன் (வயது 11), பிரநிஷா (வயது 5) ஆகிய மூன்று குழந்தைகள் உள்ளனர்.

இவர் கடந்த 2022 ஆம் ஆண்டு ஜூலை மாதம் ஈராக் நாட்டில் கம்பி கட்டும் வேலைக்காக சென்றிருந்தார். இந்நிலையில் நேற்று இரவு அவரது மனைவி கோகிலாவிடம் பேசிய பின்னர் தூங்கச் சென்று விட்டார். பின்னர் அதிகாலை 4 மணி அளவில் கோகிலாவின் வாட்ஸ் அப் நம்பருக்கு சின்னையா என்பவர் பேசி அனுப்பிய வீடியோ ஒன்று வந்துள்ளது.

இதை காலை 6 மணி அளவில் பார்த்த மனைவி கோகிலா மிகவும் அதிர்ச்சிக்குள்ளானார். உடனடியாக அவரது செல் போன் நம்பருக்கு தொடர்பு கொண்ட போது செல்போன் இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளது. இதனால் பதட்டம் அடைந்த கோகிலா இதே ஊரைச் சேர்ந்த ஈராக் நாட்டில் வேலை பார்க்கும் ஒருவரை தொடர்பு கொண்டு விசாரித்த போது உங்கள் கணவர் தூக்கு மாட்டி தற்கொலை செய்துகொண்டதாக தெரிவித்துள்ளார்.

இதனால் அதிர்ச்சியடைந்த கோகிலா தனது கணவரின் இறப்பிற்கான காரணமும், இறந்த தனது கணவரின் உடலை இந்தியா கொண்டுவர மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டியும் நத்தம் வட்டாட்சியரிடம் மனு அளித்தார். இச்சம்பவம் நத்தம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

Similar News