கரியக்கோவில் அணையின் எழில்மிகு தோற்றம்.
கரியகோவில், ஆனைமடுவு அணைகள் சுற்றுலா தலம் ஆக்கப்படுமா?
- காவல் மற்றும் நெடுஞ்சாலை, மின்வாரியம் உட்கோட்டம் உள்பட பல்வேறு அரசுத்துறை வட்டார அளவிலான அலுவலகங்களுக்கு தலைமையிடமாக விளங்குகிறது.
- வாழப்பாடி அடுத்த புழுதிக்குட்டை ஆனைமடுவு அணை மற்றும் கரியக்கோயில் அணைகளை மேம்படுத்தி சுற்றுலாத்தலமாக மாற்ற வேண்டும் எனவும் இப்பகுதி மக்கள் எதிர்பார்க்கின்றனர்.
வாழப்பாடி:
சேலம் மாவட்டம் வாழப்பாடி வருவாய் வட்டம், ஊராட்சி ஒன்றியம், காவல் மற்றும் நெடுஞ்சாலை, மின்வாரியம் உட்கோட்டம் உள்பட பல்வேறு அரசுத்துறை வட்டார அளவிலான அலுவலகங்களுக்கு தலைமையிடமாக விளங்குகிறது. 200-க்கும் மேற்பட்ட சுற்றுப்புற கிராமங்களுக்கு மட்டுமின்றி, கல்வராயன்மலை, அறுநூற்றுமலை, சந்துமலை, ஜம்பூத்துமலை கிராம மக்களின், கல்வி, போக்குவரத்து, வேலைவாய்ப்புக்கும் வாழப்பாடி மையமாக இருந்து வருகிறது.
இந்த பகுதி கிராமங்களில் அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் 12-ம் வகுப்பு படிப்பை நிறைவு செய்யும் மாணவ–-மாணவியர், பட்டப்படிப்பு படிப்பதற்கு, சேலம், ஆத்தூர், ராசிபுரம் பகுதியில் இயங்கும் அரசு மற்றும் தனியார் கல்லூரிகளுக்கு செல்ல வேண்டிய நிலை நீடித்து வருகிறது.
இதனால் தினந்தோறும் 100 கி. மீ., க்கு மேல் பயணிக்க வேண்டியுள்ளதால், கிராமப்புற மாணவ–-மாணவியர் பலர் மேற்படிப்பை தொடர முடியாத நிலை ஏற்படுகிறது. எனவே, வாழப்பாடி சுற்றுப்புற கிராம மாணவ-–மாணவியரின் நலன் கருதி, வாழப்பாடியில் அரசு கலை அறிவியல் கல்லூரி அமைக்க வேண்டும் என்று அந்த பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
வாழப்பாடி பகுதியில் பெரும்பாலான விவசாயிகள், காய்கறிகளை பயிரிட்டு வருகின்றனர். இதனால், சேலம் மாவட்டத்தில் காய்கறி உற்பத்தியில் வாழப்பாடி சுற்றுப்புற கிராமங்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன. இருப்பினும், காய்கறிகளை நியாயமான விலைக்கு விற்பனை செய்வதற்கும், நுகர்வோர்கள், விவசாயிகளிடம் நேரடியாக தரமான காய்கறிகளை கொள்முதல் செய்வதற்கும் வழிவகை இல்லாததால் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
விவசாயிகள் உற்பத்தி செய்யும் காய்கறிகளை, தனியார் தரகு மண்டி வாயிலாக வியாபாரிகளிடம் விற்பனை செய்வதால், உரிய விலை கிடைக்காமல் இழப்பு ஏற்படுகிறது. எனவே, வாழப்பாடி பகுதி விவசாயிகள் மற்றும் பொதுமக்களின் நலன் கருதி, வாழப்பாடியில் உழவர்சந்தை அமைக்கவேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்துள்ளது.
வாழப்பாடி பகுதியைச் சேர்ந்த பட்டதாரி இளைஞர்கள் மற்றும் வேலைவாய்ப்பற்ற பெண்களுக்கும், விவசாயம் மற்றும் விவசாயம் சார்ந்த தொழில்கள் நலிவுறுதலால் பாதிக்கப்படும் தொழிலாளர்களுக்கும் வேலைவாய்ப்பு ஏற்படுத்தி, வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் வகையில், வாழப்பாடியில் தொழிற்பேட்டை அமைக்க வேண்டும்.
வாழப்பாடியிலுள்ள அரசு மருத்துவமனையை 150 படுக்கைகள் கொண்ட மருத்துவமனையாக தரம் உயர்த்த வேண்டும். வாழப்பாடி வட்டாரத்தில், சிங்கபுரம் மற்றும் புழுதிக்குட்டையில் புதிதாக இரு ஆரம்ப சுகாதார நிலையங்கள் அமைக்க வேண்டும். ஏத்தாப்பூரில் முடங்கி கிடக்கும் தொழுநோய் மருத்துவமனை வளாகத்தில், நெடுஞ்சாலை விபத்து, அவசர முதலுதவி சிகிச்சை மருத்துவமனை அமைக்க வேண்டும்.
வாழப்பாடி அடுத்த புழுதிக்குட்டை ஆனைமடுவு அணை மற்றும் கரியக்கோயில் அணைகளை மேம்படுத்தி சுற்றுலாத்தலமாக மாற்ற வேண்டும் எனவும் இப்பகுதி மக்கள் எதிர்பார்க்கின்றனர்.
இந்த கோரிக்கைகள் குறித்து, இன்று ஆய்வு மேற்கொள்ளும் தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், அமைச்சர்கள் மற்றும் மாநில உயரதிகாரிகளின் கவனத்திற்கு, மாவட்ட நிர்வாகமும், மக்கள் பிரதிநிதிகளும் கொண்டு செல்ல வேண்டுமென, வாழப்பாடி பகுதி மக்களிடையே எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
வாழப்பாடி பகுதி மக்களின் அத்தியாவசிய தேவை குறித்த கோரிக்கைகள், முதல்-அமைச்சர், அமைச்சர்கள் மற்றும் மாநில அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டால், இப்பகுதியின் வளர்ச்சிக்கும் மக்களின் எதிர்பார்ப்புக்கும் நல்ல பலன் கிடைக்குமென, சமூக ஆர்வலர்களும், தன்னார்வ அமைப்பினரும் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.