உள்ளூர் செய்திகள்

மலேசிய தமிழ் சங்கத்தினருக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது.

சீர்காழிக்கு வருகை தந்த மலேசிய தமிழ் சங்கத்தினருக்கு வரவேற்பு

Published On 2023-03-06 10:04 GMT   |   Update On 2023-03-06 10:04 GMT
  • மலேசிய தமிழர்களை பற்றி யாரும் கவலைப்பட வேண்டிய நிலை இல்லை.
  • கடந்த 2004-ம் ஆண்டு முதல் கலாச்சார பயணம் மேற்கொண்டு வருகிறோம்.

சீர்காழி:

மலேசிய தமிழ்ச் சங்கத்தினர் மற்றும் மலேசியா எழுத்தாளர் சங்கத்தினர் சார்பாக மலேசிய வாழ் தமிழர்கள் 50 க்கும் மேற்பட்டோர் மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி சுற்று வட்டார பகுதிகளில் உள்ள பாரம்பரிய மிக்க கலாச்சார சின்னங்களை பார்வையிடுவதற்காக வந்திருந்தனர்.

அவர்களை சீர்காழி தமிழ்ச் சங்கத்தின் சார்பாக அதன் தலைவர் மார்கோனி தலைமையிலான நிர்வாகிகள் பொன்னாடை அணிவித்து மரியாதை செய்து வரவேற்றனர்.

அப்போது பேசிய மலேசிய தமிழ்ச்சங்க நிர்வாகிகள் சீர்காழி தமிழிசை மூவர் மணிமண்டபம், சட்டநாதர் கோவில் மற்றும் தமிழரின் வாழ்வியல் கலாச்சாரத்தை போற்றும் பூம்புகார் கலைக்கூடம் உள்ளிட்ட பகுதிகளை பார்வையிட்டு தமிழர்களின் தொன்மையான வாழ்வியல் கலாச்சாரத்தை அறிந்து கொள்வதற்காக தாங்கள் வந்துள்ளதாக தெரிவித்தனர்.

மேலும் இலங்கையில் ஏற்பட்டது போல் மலேசிய தமிழர்களுக்கும் நெருக்கடி ஏற்படலாம் என்ற தகவல் பரவி வருவதை மறுத்த தமிழ் சங்கத்தினர் எக்காலத்திலும் மலேசியத் தமிழர்களுக்கு அந்த நிலை ஏற்படாது எனவும் தெரிவித்தனர்.

மற்ற நாடுகளில் உள்ள தமிழர்கள் தங்கள் அடையாளத்தை இழந்து தமிழர் என்ற பெயரை மட்டுமே கொண்டு வாழ்ந்து வருகின்றனர்.

ஆனால் மலேசிய தமிழர்கள் மட்டுமே தமிழர்களின், பாரம்பரியம் இசை, கல்வி கலாச்சாரம் பண்பாடு, உணவு என அனைத்தையும் இன்றளவும் பாதுகாத்து வருகின்றோம்.

இன்னும் நூறு ஆண்டுகள் கடந்தாலும் தமிழ் பாரம்பரியத்தையும் கலாச்சாரத்தையும் நாங்கள் கடைபிடிப்போம் என்ற நிலையை எங்கள் முன்னோர்கள் உருவாக்கி வைத்துள்ளனர்.ஆகவே மலேசிய தமிழர்களைப் பற்றி யாரும் கவலைப்பட வேண்டிய நிலை இல்லை.

அதே நேரம் உலகத் தமிழர்கள் அனைவரும் மலேசிய தமிழர்களுக்கு ஆதரவாக இருக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.

இதனை முன்னெடுக்கும் விதமாகத்தான் கடந்த 2004 ஆம் ஆண்டு முதல் இந்த கலாச்சார பயணத்தை மேற்கொண்டு வருகிறோம் இதன் மூலம் மலேசிய தமிழ் சொந்தங்கள் தமிழ கலாச்சாரம் மற்றும் பண்பாடு ஆகியவற்றை முழுமையாக தெரிந்து கொள்ளும் வாய்ப்பு ஏற்படுகிறது.

எங்களை தங்களது தொப்புள் கொடி உறவாக நினைத்து வரவேற்று மரியாதை செய்த சீர்காழி தமிழ்ச் சங்கத்தினருக்கு மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்வதாகவும் தெரிவித்தனர்.

அப்போது சீர்காழி தமிழ் சங்கத்தை சேர்ந்த கோவி.நடராஜன, சுப்பு. சொர்ணபால் உடனிருந்தனர்.

Tags:    

Similar News