- வீடுதோறும் தேசியக்கொடி இயக்கம் நடந்தது.
- தன்னார்வலர்களுக்கு தேசிய கொடியை ஒருங்கிணைப்பாளர் வழங்கினார்.
ஸ்ரீவில்லிபுத்தூர்
இல்லம் தேடி கல்வித் திட்டம் சார்பில் வீடுதோறும் தேசியக்கொடி இயக்கத்தை முன்னெடுத்துச் செல்வது குறித்து குறுவளமைய தன்னார்வலர் ஒருங்கிணைப்பாளர்களுக்கான ஆலோசனை கூட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் ஊரணிபட்டி நடுநிலைப்பள்ளியில் நடந்தது.
திட்டத்தின் ஒருங்கிணைப்பாளர் ஜெயக்குமார் ஞானராஜ் தலைமை தாங்கினார். குறுவளமைய தன்னார்வலர் ஒருங்கிணைப்பாளர் மகாலட்சுமி வரவேற்றார்.
ஒருங்கிணைப்பாளர் ஜெயக்குமார் ஞானராஜ் பேசுகையில், 75-வது சுதந்திர தினத்தையொட்டி ஒவ்வொரு வீட்டிலும் தேசியக்கொடி என்ற திட்டத்தின்படி வருகிற 13-ந் தேதி முதல் 15-ந் தேதி வரை அனைத்து வீடுகளிலும் மூவர்ண தேசியக் கொடியை பறக்கவிட வேண்டும்.
இந்த கொண்டாட்டத்தை மக்கள் இயக்கமாக மாற்ற வேண்டும். இதற்கு இல்லம் தேடி கல்வி திட்டத்தின் தன்னார்வலர்கள், தங்கள் குடியிருப்பு பகுதியில் உள்ள அனைத்து வீடுகளிலும் தேசியக்கொடியை பறக்கவிடும் வகையில் மாணவர்கள் மற்றும் பெற்றோருக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்றார். முன்னதாக வீடுதோறும் தேசியக்கொடி இயக்கத்தை தொடங்கும் வகையில் தன்னார்வலர்களுக்கு தேசிய கொடியை ஒருங்கிணைப்பாளர் வழங்கினார்.
இதில் தன்னார்வலர்கள் சூர்யா, சித்ரா, நிரோஷா, ஈஸ்வரி, அமுதவல்லி, சுமதி, கவிதா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். தன்னார்வலர் சிவகாமி நன்றி கூறினார்.