உள்ளூர் செய்திகள்

ஆலோசனைக் கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி பேசிய காட்சி.

அ.திமு.க.வை மீண்டும் ஆட்சியில் அமர வைக்கும் படிக்கட்டாக அமையும்-கே.டி.ராஜேந்திரபாலாஜி பேச்சு

Published On 2022-09-27 09:05 GMT   |   Update On 2022-09-27 09:05 GMT
  • அ.திமு.க.வை மீண்டும் ஆட்சியில் அமர வைக்கும் படிக்கட்டாக அமையும் என்று கே.டி.ராஜேந்திரபாலாஜி கூறினார்.
  • திருத்தங்கல் அண்ணாமலையார் நகரில் கண்டன பொதுக்கூட்டம் நடக்கிறது.

சிவகாசி

விலைவாசி உயர்வு, வீட்டு வரி உயர்வு, சொத்துவரி உயர்வு, மின் கட்டண உயர்வு ஆகியவற்றை கண்டித்தும் தி.மு.க. அரசை கண்டித்தும் வருகிற 29-ந்தேதி (வியாழக்கிழமை) காலை 10 மணிக்கு விருதுநகர் மேற்கு மாவட்ட அ.தி.மு.க. சார்பில் சிவகாசி மாநகராட்சிக்கு உட்பட்ட திருத்தங்கல் அண்ணாமலையார் நகரில் கண்டன பொதுக்கூட்டம் நடக்கிறது. இதுகுறித்து சிவகாசியில் சட்டமன்றத் தொகுதி அ.தி.மு.க. சார்பில் நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் முன்னாள் நகர செயலாளர் அசன்பதுருதீன் தலைமையில் நடந்தது. சாத்தூர் முன்னாள் சட்ட மன்ற உறுப்பினர் எம்.எஸ்.ஆர்.ராஜவர்மன் முன்னிலை வகித்தார். கூட்டத்தில் அ.தி.மு.க. அமைப்புச் செயலாளரும், முன்னாள் அமைச்சருமான கே.டி.ராஜேந்திரபாலாஜி பேசியதாவது:-

தி.மு.க. அரசை கண்டித்து சிவகாசி அருகே உள்ள திருத்தங்கல் அண்ணாமலையார் நகரில் நடைபெறும் மாபெரும் கண்டன பொதுக் கூட்டத்தில் அ.தி.மு.க. இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி கலந்துகொண்டு உரையாற்றுகிறார்.

அ.தி.மு.க. ஆட்சியை இழக்கவில்லை. ஆட்சி பறிக்கப்பட்டு இருக்கிறது. அதற்கு காரணம் எப்போதெல்லாம் அ.தி.மு.க.வில் பிரச்சினை நிலவுகிறதோ அப்போதெல்லாம் தி.மு.க. ஆட்சிக்கு வந்து விடுகிறது. கடந்த 10 ஆண்டுகளில் சிவகாசியில் தீப்பெட்டி, பட்டாசு, அச்சு தொழிலுக்கு பாதுகாவலனாக இருந்துள்ளேன். எல்லா தொழிலுக்கும் எடப்பாடியார் உறுதுணையாக இருந்துள்ளார். அடுத்து வரும் எம்.பி. தேர்தலோடு எம்.எல்.ஏ. தேர்தலும் சேர்ந்து வரலாம். எனவே அ.தி.மு.க. தொண்டர்கள் இப்போதே தயாராக வேண்டும். சிவகாசிக்கு வருகை தரும் எடப்பாடியாருக்கு பிரமாண்டமான வரவேற்பு கொடுக்க வேண்டும்.

இதில் கட்சி நிர்வாகிகள் திரளாக கலந்து கொள்ள வேண்டும். சிவகாசியில் தி.மு.க. அரசை கண்டித்து நடைபெறும் கண்டண பொதுக்கூட்டம் அ.தி.மு.க.வை மீண்டும் ஆட்சியில் அமர வைக்கும் படிக்கட்டாக அமைய வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

கூட்டத்தில் எம்.ஜி.ஆர். மன்ற துணைச்செயலாளர் வேண்டுராயபுரம் சுப்பிரமணியன், மாவட்ட வக்கீல் பிரிவு செயலாளர் முத்துபாண்டியன்,மாவட்ட எம்.ஜி.ஆர். இளைஞரணி செயலாளர் பிலிப்வாசு, முன்னாள் மாவட்ட இளைஞரணி அவைத் தலைவர் லட்சம், சிவகாசி ஒன்றிய செயலாளர் புதுப்பட்டி கருப்பசாமி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News