உள்ளூர் செய்திகள்

ரூ.17.50 லட்சம் வரையிலான மானியத்துடன் தொழில் தொடங்க விண்ணப்பிக்கலாம்

Published On 2022-09-09 07:24 GMT   |   Update On 2022-09-09 07:24 GMT
  • விருதுநகர் மாவட்டத்தில் ரூ.17.50 லட்சம் வரையிலான மானியத்துடன் தொழில் தொடங்க விண்ணப்பிக்கலாம்.
  • இந்த திட்டத்தின் கீழ் கடன் பெறும் தொழில் முனைவோர்கள் திட்ட மதிப்பீட்டில் 5 முதல் 10 சதவீதம் வரை தங்கள் பங்களிப்பாக வங்கிக்கணக்கில் செலுத்த வேண்டும்.

விருதுநகர்

விருதுநகர் மாவட்ட கலெக்டர் மேகநாதரெட்டி விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

பிரதமரின் வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டத்தின் கீழ் கிராமப்புற மற்றும் நகர்புற அனைத்து ஆண், பெண் இருபாலரும் தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள் மற்றும் தேர்ந்தெடுக்கப்பட்ட தனியார் வங்கிகளின் மூலமாக ரூ.17.50 லட்சம் வரையிலான மானித்துடன் கடனுதவி பெற்று புதிதாக உற்பத்தி மற்றும் சேவை சார்ந்த தொழில் தொடங்க விண்ணப்பிக்கலாம்.

இந்த திட்டத்தின் கீழ் பயன் பெற விரும்புவோர் 18 வயதிற்கு மேல் இருக்கவேண்டும். சேவைப்பிரிவின் கீழ் ரூ.5 லட்சம் வரையிலான திட்ட அளவிற்கும் உற்பத்திப் பிரிவின் கீழ் ரூ. 10 லட்சம் வரையிலான திட்ட அளவிற்கும் கல்வித் தகுதி எதுவும் தேவையில்லை. 8-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் சேவைப் பிரிவிற்கு அதிகபட்சமாக ரூ. 20 லட்சம் வரையிலும் உற்பத்திப் பிரிவிற்கு ரூ. 50 லட்சம் வரையிலும் தொழில் தொடங்க அனுமதிக்கப்படுவார்கள்.

2022-23-ம் நிதி ஆண்டிற்கான குறியீடு 216 நபர்களுக்கு ரூ.6.24 கோடி மானியம் என விருதுநகர் மாவட்ட தொழில் மையத்திற்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

இந்த திட்டத்தின் வழி முறைகளைப் பின்பற்றி வங்கியால் ஒப்புதல் அளிக்கப்பட்ட தொழில் திட்டங்களுக்கு அதிகபட்சமாக நகர்ப்புறத்தில் 25 சதவீத மானியம், கிராமப்புறத்தில் 35 சதவீதம் மானியம் வழங்கப்படுகிறது. இந்த திட்டத்தின் கீழ் கடன் பெறும் தொழில் முனைவோர்கள் திட்ட மதிப்பீட்டில் 5 முதல் 10 சதவீதம் வரை தங்கள் பங்களிப்பாக வங்கிக்கணக்கில் செலுத்த வேண்டும்.

மேலும் இந்த திட்டத்தில் திருத்திய வழிகாட்டுதலின்படி கால்நடை மருத்துவரிடமிருந்து பெறப்படும் திட்ட அறிக்கையின் பேரில் ஆடு, மாடு, கோழி மற்றும் மீன் பண்ணைகள் சார்ந்த தொழில் தொடங்க இந்த அலுவலகம் மூலம் கடன் வசதி செய்து தரப்படும்.

விருதுநகர் மாவட்டத்தில் உள்ள படித்த ஆர்வம் உள்ள தொழில் திறமையுள்ள ஆண், பெண் தொழில் முனைவோர்கள் www.kviconline.gov.in Agency DIC என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம். மேற்கண்ட இணையதளம் மூலமாக விண்ணப்பிக்கும் போது ஆதார் எண், பெயர் ஆகியவற்றை பதிவு செய்யும் போது ஏஜென்ஸி என்ற option வரும்போது DIC என தேர்ந்தெடுக்க வேண்டும்.

இது தொடர்பாக மேலும் விபரங்களுக்கு பொது மேலாளர், மாவட்ட தொழில் மையம், மாவட்ட ஆட்சியர் வளாகம், விருதுநகர் (89255 34036) என்ற முகவரியில் அணுகி பயனடையலாம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

Similar News