உள்ளூர் செய்திகள்

குடிநீர், சாலை உள்ளிட்ட அடிப்படை வசதியின்றி தவிக்கும் கிராம மக்கள்

Published On 2023-06-03 07:37 GMT   |   Update On 2023-06-03 07:37 GMT
  • திருச்சுழி அருகே குடிநீர், சாலை உள்ளிட்ட அடிப்படை வசதியின்றி கிராம மக்கள் தவிக்கும் நிலை உள்ளது.
  • உடனடியாக நிறைவேற்றி தர நடவடிக்கை எடுக்க வேண்டும்.

திருச்சுழி

விருதுநகர் மாவட்டம் திருச்சுழி ஒன்றியம் பள்ளிமடம் ஊராட்சியில் காரேந்தல், கொக்குளம், நாடாக்குளம், பள்ளிமடம் மற்றும் ஊரணிப்பட்டி உள்ளிட்ட பல்வேறு கிரா மங்கள் உள்ளது. பள்ளிமடம் ஊராட்சிக்கு உட்பட்ட ஊரணிப்பட்டி பகுதியில் சுமார் 35 குடும்பங்கள் வசித்து வருகின்றனர்.

இங்கு பல மாதங்களாக குடிநீர், சாலைவசதி, உள்ளிட்ட எந்தவொரு அடிப்படை வசதிகளும் செய்து தரப்பட வில்லை. இதுகுறித்து அந்தப்பகுதி மக்கள் கூறியதாவது:-

கடந்த 2020-21-ம் ஆண்டு ஜல் ஜீவன் திட்டத்தின் கீழ் ஊரணிப்பட்டி கிராமத்தில் சுமார் 20 க்கும் மேற்பட்ட குடிநீர் இணைப்புகள் வழங்கப்பட்டது. இந்த நிலையில் குழாய்களில் தாமிரபரணி குடிநீருக்கு பதிலாக உப்பு தண்ணீரே சப்ளை செய்யப்படுகிறது. அதையும் கூட ஊராட்சி நிர்வாகம் முறையாக வழங்குவது இல்லை.

இதனால் அன்றாடம் குடிநீர் தேவையை பூர்த்தி செய்ய முடியாமல் கடும் சிரமத்திற்கு இடையே நாள்தோறும் குடம் ஒன்றுக்கு ரூ.12 வரை செலவழித்து 4 முதல் 8 குடங்கள் வரை தனியார் குடிநீர் வாகனங்களில் வாங்கி பயன்படுத்தி வருகிறது.

குடியிருப்புகள் வழியே முறையான சாலை வசதி யில்லாத காரணத்தால் மழைக்காலங்களின் போது தெருக்கள் முழுவதும் தண்ணீர் சூழ்ந்து தீவுகளில் வாழ்வதை போல உள்ளது. மேலும் தேங்கிய மழைநீரில் முழங்கால் வரை நனைந்த படி நடந்து செல்வதால் நோய்த்தொற்று ஏற்படுகிறது.

இது குறித்து ஊராட்சி நிர்வாகத்திடமும் திருச்சுழி யூனியன் அலுவலகத்திலும் பலமுறை புகாரளித்தும் சம்மந்தப்பட்ட அதிகாரிகள் இதுவரை எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கவில்லை. மேலும் குடிநீருக்காக அமைக்கப்பட்ட குழாய்களில் உடைப்பு ஏற்பட்டு அதனால் வீணாகி வரும் சிறிதளவு தண்ணீரையே வெகு நேரம் காத்திருந்து குடங்களில் சேகரித்து குடிநீராக பயன்படுத்தி வருகிறோம்.

ஆகவே மாவட்ட நிர்வாகம் உடனடியாக இதில் தலையிட்டு குடிநீர், சாலை வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகளை உடனடியாக நிறைவேற்றி தர நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

Tags:    

Similar News