கோத்தகிரி அருகே கரடு முரடான சாலையால் தவிக்கும் கிராம மக்கள்
- கடந்த 50 ஆண்டு காலமாக வசித்து வருகின்றனர்.
- இதனால் கிராம மக்கள் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகி உள்ளனர்.
அரவேணு,
நீலகிரி மாவட்டம் கோத்தகிரி கட்டப்பெட்டு அருகில் உள்ள பில்லிக்கம்பை சக்தி நகர் கிராமத்திற்கு செல்லும் சாலை மிகவும் பழுதடைந்து மோசமான நிலையில் இருந்து வருகிறது.
கோத்தகிரி கட்டப்பெட்டு அருகில் உள்ளது பில்லிக்கம்பை சக்தி நகர் கிராமம். இங்கு 200 -க்கும் மேற்பட்ட குடும்பங்களைச் சேர்ந்த சுமார் 800 பேர் கடந்த 50 ஆண்டு காலமாக வசித்து வருகின்றனர். இவர்களது அடிப்படை தேவையான சாலை வசதி மிகவும் மோசமான நிலையில் இருந்து வருகிறது. அந்த கிராமத்துக்கு செல்லும் சாலை பயன்படுத்த முடியாத வகையில் கரடுமுரடாக காட்சி அளிக்கிறது.
இவர்கள் பல முறை பல அதிகாரிகளிடமும், அரசியல் பிரமுகர்களிடமும் மனு கொடுத்தும் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இவர்களது கிராமம் பிரதான சாலையில் இருந்து வனப்பகுதியில் 4 கிலோமீட்டர் செல்வதால் காலை வேளையில் குழந்தைகளை பள்ளி வாகனங்களுக்கு கூட இந்த தொலைவை கடந்து வந்து அவர்களே ஏற்றி விட வேண்டிய சூழ்நிலை நிலவுகிறது.
மேலும் அவசர தேவைகளான மருத்துவம் உதவிக்காக அவசரஊர்தி வந்து செல்வதற்கு ஏற்றவாறு சாலை இல்லை என்பதால் பெரும் சிரமத்திற்கு ஆளாகி அவர்களை தொட்டில் கட்டி தூக்கி வரும் சூழ்நிலை நிலவுகிறது. இதனால் கிராம மக்கள் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகி உள்ளனர்.
மேலும் இவர்களுக்கான சிறந்த குடிநீர் வசதி போன்ற அடிப்படை வசதிகள் சரியான முறையில் கிடைப்பதில்லை எனவும் குற்றம் சாட்டுகின்றனர்.