சப்-இன்ஸ்பெக்டர் பணிக்காக எழுத்து தேர்வு
- வேலூர் வி.ஐ.டி. பல்கலைக்கழகத்தில் ஏற்பாடு
- வருகிற 26, 27-ந் தேதிகளில் நடைபெறுகிறது
வேலூர்:
தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வாணையம் சார்பில் சப்-இன்ஸ்பெக்டர் பணிக்கான ஆள் தேர்வு அறிவிப்பு கடந்த மே மாதம் வெளியிடப்பட்டது.
எழுத்து தேர்வு
மொத்தம் 621 பணியிடங்களுக்கான அறிவிப்பில் விண்ணப்பித்த வர்களுக்கான முதற்கட்ட எழுத்துத்தேர்வு வருகிற 26 மற்றும் 27-ந் தேதிகளில் நடை பெறவுள்ளது.
அதன்படி, வேலூர் மாவட் டத்தில் வி.ஐ.டி. பல்கலைக்கழகத்தில் எழுத்துத் தேர்வு நடக்கிறது.
ஆகஸ்ட் 26-ந் தேதி பொதுப்பிரிவினர் மற்றும் போலீஸ் துறையில் பணியாற்றும் போலீசாருக்கு 100 மதிப்பெண்களுக்கான தமிழ் முதல் தாள் தேர்வு காலையில் நடக்கிறது. அதில் மொத்தம் 7,613 பேர் பங்கேற்கின்றனர்.
அன்றைய தினம் பிற்பகலில் பொதுப் பிரிவினருக்கு மட்டும் பொதுஅறிவு, உளவியல் தேர்வு 70 மதிப்பெண்கள்தேர்வு நடைபெற உள்ளது.
பாதுகாப்பு பணி
தொடர்ந்து, மறுநாள் 27-ந் தேதி போலீஸ் துறையில் பணியாற்றும் போலீசாருக்கு மட்டும் பொதுஅறிவு, உளவியல், சட்டம் மற்றும் போலீஸ் நிர்வாகம் தொடர்பாக 85 மதிப்பெண்களுக்கான 2-ம் தாள் தேர்வு நடைபெறுகிறது. இதில், 1,081 பேர் பங்கேற்க உள்ளனர்.
வி.ஐ.டி. பல்கலைக் கழகத்தில் நடைபெறும் தேர்வு பணியில் வேலூர் சரக டி.ஐ.ஜி. முத்துசாமி மேற்பார்வையில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மணிவண்ணன் தலைமையில் சுமார் 1,000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.