பெண்கள் ரூ.1000 பெற தபால் நிலையங்களில் வங்கி கணக்கு தொடங்கலாம்
- வீடு தேடி உதவித்தொகை வரும்
- அஞ்சல் அதிகாரி தகவல்
வேலூர்:
கலைஞர் மகளிர் உரிமைத்தொகை பெறுவதற்கு ஆதாருடன் இணைக்கப்பட்ட வங்கி கணக்கு அவசியம் என்ற நிலையில் வேலூர் கோட்ட அஞ்சலகங்களில் இந்தியா போஸ்ட் பேமெண்ட்ஸ் வங்கி கணக்கு தொடங்கி பயன் பெறலாம் என வேலூர் அஞ்சல் கோட்டை கண்காணிப்பாளர் முரளி தெரிவித்தார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-
கலைஞர் மகளிர் உரிமைத்தொகை பெற தகுதியுள்ள பயனாளிகளுக்கு ஆதார் இணைப்புடன் கூடிய வங்கி கணக்கு அவசியம் என்பதால், தகுதியுள்ள பயனாளிகள் அருகில் உள்ள அஞ்சல் ஊழியரை அணுகி ஆதார் இணைப்புடன் கூடிய இந்தியா போஸ்ட் பேமெண்ட்ஸ் வங்கி கணக்கு தொடங்கி பயன்பெறலாம்.
இந்த கணக்குக்கு இருப்பு தொகை எதுவும் கிடையாது. தகுதியுள்ள பயனாளிகள் மாதாந்திர உரிமைத் தொகையை அருகிலுள்ள போஸ்ட் ஆபீஸ்களிலும், டோர் ஸ்டெப் பேங்கிங் என்ற சிறப்பு சேவை மூலம் தங்கள் வீடுகளிலேயே தபால் மூலம் பெற்றுக்கொள்ள முடியும்.
கலைஞர் மகளிர் உரிமைத்தொகை, முதியோர் மற்றும் மாற்றுத்திறனாளிகள் உதவித்தொகை, கல்வி உதவித்தொகை, தொழிலாளர் நல வாரிய உதவித்தொகை பெரும் பயனாளிகளும் இந்த இந்தியா போஸ்ட் பேமெண்ட் வங்கி கணக்கு தொடங்கி பயன்பெறலாம்.
எனவே மாவட்டத்தில் உள்ள அனைத்து போஸ்ட் ஆபீஸ்களிலும் செயல்படுத்தப்பட்டு வரும் இந்தியா போஸ்ட் பேமன்ட் வங்கி சேவையை பயன்படுத்தி ஆதாருடன் இணைக்கப்பட்ட வங்கி கணக்கு தொடங்கி பயன்பெறலாம் இவ்வாறு அவர் கூறியுள்ளார்.